வயநாடு: “எனது எம்.பி. பதவி, வீட்டை அவர்கள் (பாஜக) பறிக்கலாம் அல்லது என்னைச் சிறையில் அடைக்கலாம். ஆனால், நான் வயநாடு மக்களுக்காகவும், இந்திய மக்களுக்காக இயங்குவதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது” என்று கடந்த மக்களவைத் தேர்தலில் தான் வெற்றி பெற்ற தொகுதியான வயநாட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
கேரளாவில் உள்ள வயநாட்டில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை, காங்கிரஸ் பேரணியும் பொதுக் கூட்டமும் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த இந்தப் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது: “எம்.பி. என்பது பதவி மட்டும்தான். பாஜக எனது பதவி, வீட்டைப் பறிக்கலாம் அல்லது என்னைச் சிறையில் அடைக்கலாம். ஆனால், அவர்களால் வயநாடு மக்களின் பிரதிநிதியாக இருப்பதை தடுக்க முடியாது.
நான் பல ஆண்டுகளாக பாஜகவுடன் அரசியல் ரீதியாக சண்டையிட்டு வருகிறேன். ஆனால், இன்னமும் தங்களது எதிர்க்கட்சிகளை பற்றி பாஜக புரிந்துகொள்ளவில்லை என்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. நாங்கள் பயப்பட மாட்டோம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் என் வீட்டுக்கு போலீஸாரை அனுப்புவதன் மூலம், என் வீட்டை என்னிடமிருந்து பறிப்பதன் மூலம் நான் தொந்தரவுக்கு ஆளாவேன் என்று நினைக்கிறார்கள். அதில், உண்மையில்லை.
என் சகோதரி பிரியங்கா இதனை உங்களுக்கு கூறியிருக்கமாட்டார்... உண்மையில், அவர்கள் என் வீட்டை என்னிடமிருந்து பறித்ததற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில், எனக்கு அந்த வீட்டில் இருப்பது சுவாரசியமாக இல்லை. வயநாட்டில் வெள்ளத்தின்போது வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கானவர்களை நான் பார்த்தேன். வயநாட்டில் நான் பார்க்கும் முதல் விஷயம் நீங்கள் வெள்ளத்தை எப்படி எதிர்கொண்டீர்கள் என்பதுதான். நீங்கள்தான் கற்று தந்தீர்கள்.
என் வீட்டை எடுத்து கொள்ளட்டும். எனக்கு அதனைப் பற்றி கவலையில்லை. நான் தொடர்ந்து வயநாடு மற்றும் இந்திய மக்களின் பிரச்சினைகளை எழுப்புவேன். பாஜக மக்களைப் பிரிக்கிறது, பாஜக மக்களை சண்டையிட வைக்கிறது, மக்களை அச்சுறுத்துகிறது, மக்களை துஷ்பிரயோகம் செய்கிறது. ஆனால், நான் மக்களை ஒன்றிணைப்பேன், ஒவ்வொரு சமூகத்தையும், ஒவ்வொரு மதத்தையும், ஒவ்வொரு கருத்தையும் நான் மதிக்கிறேன்.
பாஜக எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் விரும்புவது போல் நீங்கள் தீயவர்களாக இருங்கள்.. ஆனால், உங்களிடம் கூட முடிந்தவரை நான் அன்பாக நடந்து கொள்வேன். ஏனென்றால், இது இந்தியாவின் இரண்டு பிரிவுகளுக்கு இடையேயான சண்டை. நீங்கள் இந்தியாவின் ஒரு பிரிவை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள், நாங்கள் இந்தியாவின் மற்றொரு பிரிவை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்.
நான் என்ன செய்தேன்..? நாடாளுமன்றம் சென்று தொழிலதிபர் அதானி பற்றி பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினேன். மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவை விவரிக்கச் சொன்னேன். அதானி எப்படி உலகப் பணக்காரர் பட்டியலில் 609-ஆம் இடத்திலிருந்து 2-ஆம் இடத்திற்கு வந்தார் என்பதற்கான ஊடகச் செய்திகளை நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டினேன்.
அதானியின் இந்த வளர்ச்சியை பிரதமரே எப்படி எளிதாக்கினார் என்பதற்கு நான் உதாரணங்களைச் சொன்னேன். அதானிக்கு உதவும் வகையில் இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு எவ்வாறு முழுமையாக மாற்றப்பட்டது என்பதை நான் சுட்டிக் காட்டினேன். அதானிக்கு உதவும் வகையில் இந்திய விமான நிலையங்களின் விதிகள் எப்படி மாற்றப்பட்டன என்பதை சுட்டிக் காட்டினேன். அதானிக்கு உதவ வெளியுறவுக் கொள்கை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதைச் சுட்டிக் காட்டினேன்.
நான் ஓர் எளிய கேள்வியை நாடாளுமன்றத்தில் கேட்டேன். ஆனால், என் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை. இதற்கு எதிர்வினையாக அரசாங்கமே நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் இருந்ததை நீங்கள் முதன்முறையாக பார்த்தீர்கள். நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. நான் பதிலளிக்க அனுமதிக்கப்படவில்லை. முடிவில், நான் கேட்கும் கேள்விகளும், நான் எழுப்பும் பிரச்சினைகளும் அரசாங்கத்திற்கு சங்கடமாக இருந்ததால் நான் நாடாளுமன்றத்திலிருந்து நீக்கப்பட்டேன்.
பரவாயில்லை... அவர்கள் எனக்குக் கொடுத்த மிகப்பெரிய பரிசாக எனது நீக்கத்தை கருதுகிறேன். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால், நான் செய்வது சரியென்று எனக்கு எப்படித் தெரியும்? நான் நடக்க வேண்டிய பாதை இதுதான். நான் நிறுத்த மாட்டேன். இது எனக்காக அல்ல. இந்தப் பயணம் நான் உங்களுடன், இந்திய நாட்டு மக்களுடன் கொண்ட உறவுக்காக” என்று ராகுல் காந்தி பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago