உ.பி.யில் முஸ்லிம்களை கவர கவாலி கச்சேரிகள்: மக்களவை தேர்தலுக்காக பாஜக உத்தி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2014 முதல் மத்தியில் ஆட்சி செய்கிறது. கூட்டணியாக போட்டியிட்டாலும் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைத்து வருகிறது. இதற்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடியையே மீண்டும் முன்னிறுத்தி அடுத்த வருடத் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிடுகிறது.

இதற்காக பாஜகவால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட சிறுபான்மையினர் ஆதரவை தற்போது அக்கட்சி தேடத் துவங்கி உள்ளது. பாஜகவின் கடந்த இரண்டு நிர்வாகக்குழுக் கூட்டங்களிலும் பேசிய பிரதமர் மோடி, சிறுபான்மையினரை சென்று சந்திக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதில் நாட்டில் அதிக அளவாக 80 மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தின் முஸ்லிம்கள் முக்கியத்துவம் பெறத் துவங்கி உள்ளனர். இங்கு மிக அதிகமாக சுமார் 24 சதவீதம் உள்ள முஸ்லிம்கள், சுமார் 25 தொகுதிகளில் வெற்றி - தோல்வியை நிர்ணயிப்பவர்களாக உள்ளனர். எனவே, உ.பி.யில் முஸ்லிம்களை கவர பாஜக பல்வேறு உத்திகளை கையாளத் துவங்கி உள்ளது. இதில் ஒன்றாக மாநிலம் முழுவதிலும் ‘சூஃபி சம்வாத் மஹா அபியான்’ எனும் பெயரில் கவாலி பாடல் கச்சேரிகள் நடத்த முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் உ.பி. பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தலைவரான குன்வர் பாஸித் அலி கூறும்போது, “இங்குள்ள தர்காக்கள் அனைத்திலும் கவாலி கச்சேரிகள் நடத்த முடிவு செய்துள்ளோம். முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் மவுலானாக்கள் கூட்டங்கள் நடத்தி, மாநிலம் மற்றும் மத்திய அளவில் சிறுபான்மையினருக்கான திட்டங்களை எடுத்துரைக்க உள்ளோம். முஸ்லிம்களில் ஜாட், குஜ்ஜர், ராஜ்புத் மற்றும் தியாகி சமூகத்தினர் மேற்கு உ.பி.யில் அதிகமாக உள்ளனர். அவர்களது வாக்குகளையும் இந்த முறை பெறுவது எங்கள் நோக்கம்” என்று தெரிவித்தார்.

இந்த உத்திகளை உ.பி.யில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ஒத்திகை பார்க்க பாஜக தயாராகி வருகிறது. அதேசமயம், கிறிஸ்தவர் மற்றும் சீக்கியர்களை யும் கவரவும் பாஜக சில திட்டங்கள் வகுத்து வருகிறது. இதில், ஒன்றாகத்தான் நேற்று முன்தினம் ஈஸ்டர் பண்டிகை நாளில் பிரதமரே டெல்லியின் தேவாலாயத்திற்கு திடீர் விஜயம் செய்து கிறிஸ்தவர்களை வாழ்த்தினார். இதைத்தொடர்ந்து அவரது அமைச்சர்களும் கிறிஸ்தவர்கள் பலரின் வீடுகளுக்கும் தேவாலயங்களுக்கும் சென்று வாழ்த்தி விட்டு வந்தனர். இது கேரளாவிலும் அதிகமாக நடைபெற்றுள்ளது.

சீக்கியர்கள் அதிகமுள்ள பஞ்சாபிலும் இதுபோல் புதிய நடவடிக்கைக்கு பாஜக தயாராகி வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களில் காங்கிரஸுக்கு 2019 மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகள் கிடைத்தன. கேரளாவின் 20 தொகுதிகளில் 15, பஞ்சாபின் 13 தொகுதிகளில் 8 என காங்கிரஸ் கைப்பற்றியது. இதை அக்கட்சியிடம் இருந்து பறிப்பது பாஜகவின் முக்கிய நோக்கமாக உள்ளது.

கடைசியாக கடந்த வருடம் ஜூலையில், மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்த முக்தர் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை எம்.பி. பதவி காலாவதியானது. இதன் பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜகவிற்கு முஸ்லிம் எம்.பி. ஒருவர்கூட இல்லை என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE