‘அல் ஜசீரா’ சேனலுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு விழா, நாடு முழுவதும் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கொண்டாடப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 3,167 புலிகள் உள்ளன என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தியாவின் புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடர்பாக கத்தார் நாட்டை சேர்ந்த அல் ஜசீரா தொலைக்காட்சி நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது. அதில், “இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு என்ற பெயரில் வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்’’ என்று கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது. பல்வேறு நாடுகளில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் மட்டுமே புலிகளின் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற வெறுப்புணர்வு பிரச்சாரத்தை அல் ஜசீரா கைவிட வேண்டும். அந்த ஊடக செய்திக்கு கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

அல் ஜசீரா உண்மையான பத்திரிகை தர்மத்துக்கு மாறும் நாள் வரும். அப்போது இந்தியாவின் புலிகள் பாதுகாப்பு திட்டத்தை அந்த ஊடக நிறுவனம் நிச்சயமாகப் பாராட்டும். வனப் பகுதியில் வாழும் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் புலிகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க முடியாது. இந்தியாவின் புலிகள் காப்பகங்கள் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE