நந்தினியை காப்போம் (#SaveNandini) - இதுதான் கர்நாடகாவின் மிகப் பெரிய பிரச்சாரமாக தற்போது உருவெடுத்திருக்கிறது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கர்நாடகாவின் விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் என எல்லோரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் #SaveNandini ஹேஷ்டாக்கை வைரலாக்கி வருகிறார்கள்.
நந்தினிக்கு ஆதரவாக கர்நாடகா ரக்ஷன வேதிகே அமைப்பு சார்பில் பெங்களூருவில் இன்று மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. உரிய அனுமதி பெறாமல் போராடியதால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவின் முன்னாள் முதல்வர்கள் சித்தராமைய்யா, குமாரசாமி முதல் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை வரை அரசியல் தலைவர்களும் நந்தினி குறித்தே அதிகம் பேசி வருகிறார்கள். உண்மையில் யார் இந்த நந்தினி? நந்தினிக்கு என்னதான் ஆயிற்று? ஏன் எல்லோரும் நந்தினி குறித்தே அதிகம் பேச வேண்டும்? - அதுவும் தேர்தல் சமயத்தில். விரிவாகப் பார்ப்போம்.
யார் இந்த நந்தினி? - தமிழ்நாட்டில் ஆவின் இருப்பதுபோல், குஜராத்தில் அமுல் இருப்பதுபோல், கர்நாடகாவில் இருக்கும் பால் மற்றும் பால் பொருட்களுக்கான பிராண்ட் பெயர்தான் நந்தினி. கர்நாடக அரசின், கர்நாடக பால் கூட்டுறவு அமைப்பு இந்த பெயரில்தான் பால் மற்றும் பால் பொருட்களை அந்த மாநிலம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், 'நந்தினி' கர்நாடக மக்களின் உணர்வோடு கலந்த ஒரு பெயர். சரி, இந்த நந்தினிக்கு என்ன ஆயிற்று? அதுதானே அடுத்த கேள்வி. நந்தினிக்குப் போட்டியாக கர்நாடகாவுக்குள் அமுல் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த முயன்றதுதான் பிரச்சினைக்குக் காரணம்.
அமுல் எனும் பிரம்மாண்டம்: பால் உற்பத்தியில் இந்தியாதான் உலகின் முதல்நாடு. அதுபோல், பால் உற்பத்தியில் அமுல்தான் இந்தியாவின் முதல் நிறுவனம். 1973ம் ஆண்டு குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது இந்நிறுவனம். Anand Milk Union Limited என்பதன் முதல் எழுத்துக்களைக் கொண்டதுதான் Amul. 33 மாவட்டங்களில் உள்ள 36.40 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து சுமார் 2.63 கோடி லிட்டர் பாலை இந்நிறுவனம் நாள்தோறும் கொள்முதல் செய்கிறது. அதுமட்டுமல்ல, நாள்தோறும் 4 கோடி லிட்டர் பாலை கையாளும் திறன் கொண்டது இந்நிறுவனம்.
» ‘விடுதலை’யின் மீதான விமர்சன ஒடுக்குமுறை!
» வட மாநில தொழிலாளர்கள் @ தமிழகம் 5 - கேள்விக்குறியாகும் குழந்தைகளின் எதிர்காலம்!
கடந்த 2021-22 நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ. 50.83 ஆயிரம் கோடி. இந்தியாவில் இந்நிறுவனம் 76 விற்பனை அலுவலகங்கள், 10 ஆயிரம் டீலர்கள், 10 லட்சம் விற்பனையாளர்கள் என மிகப் பெரிய நெட்ஒர்க்கைக் கொண்டுள்ளது. குஜராத் மட்டுமல்லாது, டெல்லி, மும்பை, சண்டிகர், கொல்கத்தா, புனே, போபால், குவஹாத்தி, லக்னோ, சென்னை என நாட்டின் பல்வேறு பகுதிகளை பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. அதோடு, இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி அமுல் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. 'அமுல் பால் மற்றும் தயிர் பெங்களூருவுக்கு வருகிறது' என்பதுதான் அந்த அறிவிப்பு. இந்த அறிவிப்பை அடுத்தே, #SaveNandini, #BoycottAmul, #GoBackAmul ஆகியவை வைரலாகி வருகின்றன.
நந்தினிக்கு அதிகரிக்கும் ஆதரவு: கர்நாடக பால் உற்பத்தியாளர்கள், பால் கூட்டுறவு சங்கங்கள், விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் நந்தினிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். இவர்களில் பலரும் நந்தினி பாலகங்களுக்குச் சென்று நந்தினி பால் பொருட்களை வாங்கி செல்பி எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்வது, நந்தினி பால் குடித்து அதன் புகைப்படங்களைப் பகிர்வது என நந்தினிக்கான தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள கர்நாடக இல்லத்தரசி ஒருவர், ''எல்லாவற்றையும் குஜராத்துக்குக் கொடுத்துவிட்டால் கர்நாடகாவுக்கு என்ன இருக்கும்? நமக்கானதை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதுதான் நமக்கு நல்லது'' என தெரிவித்துள்ளார். கர்நாடக பெருமையை தூக்கிப் பிடிக்கும் கர்நாடக ரக்ஷன வேதிகே போன்ற அமைப்புகள் நந்தினிக்காக வீதிக்கு வந்து போராடி வருகின்றன.
அரசியலான நந்தினி விவகாரம்: இவை ஒருபுறம் இருக்க தேர்தல் நேரம் என்பதால், இதனை ஆளும் பாஜகவுக்கு எதிரான மிகப் பெரிய ஆயுதமாக மாற்ற எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. கர்நாடகாவின் நந்தினியை அழிக்கும் நோக்கிலேயே ஆளும் பாஜக குஜராத்தின் அமுலை திணிக்க முயல்வதாக அவை குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது தேர்தல் பிரச்சாரமே திடீரென திசை மாறி இருக்கிறது.
காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டு: ஹசன் நகரில் உள்ள நந்தினி பால் விற்பனையகத்துக்கு வந்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், அங்கு நந்தினி பால் பொருட்களை மொத்தமாக வாங்கி தனது ஆதரவாளர்களுக்கு விநியோகித்து தனது ஆதரவை வெளிப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அமுல் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கர்நாடக விவசாயிகளின் உரிமை. கர்நாடகாவில் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பால் உற்பத்தி செய்து அதனை நந்தினிக்கு வழங்குகிறார்கள்.
அப்படி இருக்கும்போது குஜராத்தின் அமுல் நிறுவனத்தை கர்நாடகாவில் திணிப்பது தவறானது. நாங்கள் எங்கள் மாநிலத்தின் பால் உற்பத்தியையும், விவசாயிகளையும் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம். கர்நாடகாவின் ஆளும் கட்சியான பாஜக, வேண்டுமென்றே குஜராத்தின் அமுலை இங்கே திணிக்கிறது. அமுலைவிட நந்தினி பால் மற்றும் பால் பொருட்கள் தரமானவை. எங்களிடம் தரமான ஒரு பிராண்ட் இருக்கும்போது எங்களுக்கு அமுல் எதற்கு? எங்கள் தண்ணீர்; எங்கள் மண்; எங்கள் பால் அதுதான் எங்களுக்கு வலிமை'' என தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காரசாரமாக கருத்து பதிவிட்டுள்ள முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, அதில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். ''நீங்கள் கர்நாடகாவுக்கு வருவது எதற்கு? கர்நாடகாவுக்குக் கொடுப்பதற்கா அல்லது கர்நாடகாவில் இருந்து கொள்ளையடிப்பதற்கா? ஏற்கனவே, வங்கிகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை கர்நாடக மக்களிடம் இருந்து கொள்ளையடித்துவிட்டீர்கள். தற்போது எங்களிடம் இருந்து நந்தினியையும் திருட முயல்கிறீர்களா? கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஒரு லிட்டர் பாலுக்கு ரூ. 5 ஊக்கத்தொகையாகக் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக 2013ல் 45 லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தி 2017ல் 73 லட்சம் லிட்டராக உயர்ந்தது. ஆனால், தற்போதைய பாஜக அரசு, நந்தினியை அமுலிடம் ஒப்படைக்க முயல்வதன் மூலம் கர்நாடக விவசாயிகளின் வாய்ப்புகளை பறிக்க விரும்புகிறது'' என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹெச்.டி. குமாரசாமியின் குற்றச்சாட்டு: கர்நாடக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான ஹெச்.டி. குமாரசாமி, ''இது பாஜகவின் திட்டமிட்ட சதி. நந்தினியை அமுலோடு இணைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி இருக்கிறார். இது முதல் சதி. அடுத்ததாக, நந்தினி தயிர் பாக்கெட்டுக்களில் தஹி என இந்தி எழுத்து இடம்பெற வேண்டும் என கூறினார்கள். இது இரண்டாவது சதி. கர்நாடக மக்களின் விழிப்புணர்வுடன் கூடிய போராட்டங்கள் காரணமாக இந்த இரு சதிகளும் முறியடிக்கப்பட்டன. தற்போது அமுல் மூலம் மூன்றாவது சதியை மத்திய அரசு செய்துள்ளது. கர்நாடக சந்தையில் நந்தனிக்கு இருக்கும் பங்கை குறைத்து அமுலின் பங்கை உயர்த்துவதற்கான இந்த முயற்சி, கர்நாடக பால் உற்பத்தியாளர்களுக்கு எதிரானது. அதோடு, இது ஒரு ஆரோக்கியமற்ற போட்டி. நந்தினியை அழிப்பதற்கான முயற்சியை கர்நாடக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்'' என தெரிவித்துள்ளார்.
பாஜக அளிக்கும் விளக்கம்: பாஜகவுக்கு எதிரான தேர்தல் ஆயுதமாக நந்தினி விவகாரம் மாற்றப்பட்டு வரும் நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள பாஜக தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் அமித் மால்வியா, ''அமுல் கர்நாடகாவுக்குள் நுழையவில்லை. ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு டோர் டெலிவரி செய்யக்கூடிய சேவையை அமுல் வழங்குகிறது. இந்த சேவையை நந்தினியும் வழங்குகிறது. கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்த 2019ல் அதன் விற்பனை மதிப்பு ரூ. 10 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது அது ரூ. 25 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில், ரூ. 20 ஆயிரம் கோடி கர்நாடக விவசாயிகளுக்குச் சென்றுள்ளது.
நந்தினியை அமுலுடன் இணைக்க பாஜக முயல்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அரசியலுக்காக காங்கிரஸ் பொய் சொல்கிறது. அதனால்தான் நாடு முழுவதுமே காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. நந்தினையை சர்வதேச பிராண்டாக மாற்ற பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நந்தினியின் 15 சதவீதம் கர்நாடகாவுக்கு வெளியே விற்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கு நந்தனி ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாஜக ஆட்சியில் கர்நாடகாவில் பால் உபரியாக உள்ளது. விவசாயிகள் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்கள். பசுக்கள் கொல்லப்படுவதற்கு எதிரான சட்டத்தை எதிர்த்த கட்சி காங்கிரஸ். தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கிறது'' என விமர்சித்துள்ளார்.
கர்நாடக முதல்வரின் பதில்: இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ''நந்தனி நமது பால். இது தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் விற்பனையாகி வருகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டில், தினசரி 84 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 94 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே நந்தினியின் பிராண்ட் வேல்யூ எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் பொய்யான செய்திகளைப் பரப்பி மக்களை குழப்பும் கீழ்த்தரமான அரசியலை செய்கின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது'' என தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? - கர்நாடகாவில் அமுல் பால் பொருட்கள் அதாவது ஐஸ்கிரீம், குளிர் பானங்கள், நெய், பால் பவுடர், சாக்லேட் உள்ளிட்டவை விற்கப்படுவதில் பிரச்சினை இல்லை. பால் மற்றும் தயிரை விற்க முயல்வதுதான் தற்போது பிரச்சினையாக மாறி இருக்கிறது. கர்நாடக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில், நந்தினி விவகாரம் எதிர்க்கட்சிகளுக்கு பெரிய வாய்ப்பாகவே மாறி இருக்கிறது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு வலுவான பதிலை தர பாஜக தவறவில்லை என்றபோதிலும், இது ஒரு உணர்வுபூர்வமான விஷயமாக மாறி இருப்பதை மறுக்க முடியாது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago