கர்நாடகாவில் அமுல் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனைக்கு எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகாவில் அமுல் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

குஜராத்தை மையமாகக் கொண்டு செயல்படும் அமுல் நிறுவனம், பால் விநியோகத்திலும், பால் பொருட்கள் விநியோகத்திலும் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் இந்நிறுவனம் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்நிறுவனம் கர்நாடகாவிலும் தனது சேவையைத் தொடங்கி உள்ளது. தலைநகர் பெங்களூருவில் அமுல் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கும் என அமுல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, அம்மாநில எதிர்க்கட்சிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கர்நாடகாவில் கர்நாடக பால் கூட்டுறவு அமைப்பு சார்பில் நந்தினி என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. அமுல் வருகையால் நந்தினியின் விற்பனை சரியும் என்றும், கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதனால் கர்நாடகாவில் பலர் வேலை இழக்கும் நிலை உருவாகும் என்றும் கூறி, பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூருவில் அமுல் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா ரக்ஷன வேதிகே அமைப்பு சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், ஹசன் நகரில் உள்ள நந்தினி பால் விற்பனையகத்துக்கு வந்து அங்கு நந்தினி பால் பொருட்களை வாங்கி தனது ஆதரவாளர்களுக்கு விநியோகித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், ''அமுல் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கர்நாடக விவசாயிகளின் உரிமை. கர்நாடகாவில் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பால் உற்பத்தி செய்து அதனை நந்தினிக்கு வழங்குகிறார். அப்படி இருக்கும்போது குஜராத்தின் அமுல் நிறுவனத்தை கர்நாடகாவில் திணிப்பது தவறானது. நாங்கள் எங்கள் மாநிலத்தின் பால் உற்பத்தியையும், விவசாயிகளையும் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம்.

கர்நாடகாவின் ஆளும் கட்சியான பாஜக, வேண்டுமென்றே குஜராத்தின் அமுலை இங்கே திணிக்கிறது. அமுலைவிட நந்தினி பால் மற்றும் பால் பொருட்கள் தரமானவை. எங்களிடம் தரமான ஒரு பிராண்ட் இருக்கும்போது எங்களுக்கு அமுல் எதற்கு? எங்கள் தண்ணீர்; எங்கள் மண்; எங்கள் பால் அதுதான் எங்களுக்கு வலிமை'' என தெரிவித்தார். கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், நந்தினி மற்றும் அமுல் இடையே எழுந்திருக்கும் இந்த பிரச்சினை, அம்மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE