“சதிகாரர்களால் பாலாசாகேப்பின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லமுடியாது” - கபில் சிபல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சதிகாரர்கள், சந்தர்ப்பவாதிகள், முதுகில் குத்துபவர்களால் பாலாசாகேப்பின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா முதல்வரின் அயோத்தி பயணத்தைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே கடந்த ஆண்டு ஜுன் மாதம் பதவியேற்ற பின்னர், முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை அவர் அயோத்திக்கு சென்றார். அப்போது அவருடன் ஆயிரக்கணக்கான சிவ சைனிக்குகளும் அயோத்திக்குச் சென்றனர்.

ஷிண்டேவின் இந்த பயணம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், ராஜ்ய சபா எம்.பி.யுமான கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," அயோத்தியில் ஷிண்டே: கடவுள் ராமன் தியாகம், சத்தியம், உண்மையின் பாதையைத் தேர்ந்தெடுத்தார். பாலா சாகேப் அந்தப் பண்புகளை உள்வாங்கி இருந்தார். சதிகாரர்கள், சந்தர்ப்பவாதிகள், முதுகில் குத்துபவர்களால் பாலாசகேப்பின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அயோத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே,"எங்கள் கட்சியின் பணி தெளிவானது. பாஜகவுடன் சிவ சேனா கூட்டணி வைத்துள்ளது. இந்துத்துவம் குறித்த எங்களுடைய சிந்தாந்தம் ஒன்றே. அயோத்தியில் இருந்து பெற்ற புதிய உத்வேகத்துடன் மகாராஷ்டிரா திரும்பிச் சென்று மக்களுக்காக உழைக்கப் போகிறோம். வரும் 2024-ல் சிவசேனா மற்றம் பாஜகவின் காவிகொடி மாநிலம் முழுவதும் பறக்கும்" என்று தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ல நிலையில், மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கிடையில் கடந்த 2022-ம் ஆண்டு ஜுன் மாதம் சிவசேனாவில் ஏற்பட்ட கிளர்ச்சி, அதனைத்தொடர்ந்து நடந்த பிளவு காரணமாக அக்கட்சி உத்தவ் தாக்கரே அணி, ஏக்நாத் ஷிண்டே அணி என இரண்டாகப்பிரிந்தது. இதனால் உத்தவ் தக்கரேவின் தலைமையிலான மஹா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE