தெப்பக்காடு முகாமில் பிரதமர் மோடி உற்சாகம்: ஆஸ்கர் பட நாயகர்களான பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு பாராட்டு தெரிவித்தார்!

By செய்திப்பிரிவு

முதுமலை: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட்ட பிரதமர் மோடி, வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு கொடுத்து மகிழ்ந்தார். ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப் பட நாயகர்களான பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு பாராட்டு தெரிவித்தார்.

புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன்விழா, நாடு முழுவதும் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நேற்று கர்நாடக மாநிலம் பந்திப்பூர் மற்றும் தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகங்களுக்கு வருகை தந்தார்.

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரம் வாகனம் மூலம் பயணித்து, முதுமலை தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்கு காலை 11.15 மணிக்கு பிரதமர் வந்தடைந்தார். அவரை தமிழக வனத் துறை செயலர் சுப்ரியா சாஹு, முதன்மை வனப் பாதுகாவலர் சீனிவாஸ் ஆர்.ரெட்டி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், ஐ.ஜி. சுதாகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் டி.வெங்கடேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர், ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் படத்தின் நாயகர்களான பொம்மன் - பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டினார். முதுமலையில் குடியிருப்பு பகுதியில் திரிந்த ‘டி 23’ புலியை உயிருடன் பிடித்த வேட்டைதடுப்பு காவலர் பன்டனுக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து, தெப்பக்காடு முகாமில் உள்ள குட்டி யானைகளான ரகு, பொம்மியை பார்வையிட்டார். அவற்றை வளர்த்த பொம்மன் - பெள்ளி தம்பதியுடன் இணைந்து, குட்டி யானைகளுக்கு உணவு ஊட்டினார். அங்குள்ள வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு வழங்கியும், யானைகளை தடவிக் கொடுத்தும் மகிழ்ந்தார்.

துதிக்கை உயர்த்திய யானைகள்

யானைகள் நன்றியை வெளிப்படுத்தும் விதமாக துதிக்கையை உயர்த்தியதை பிரதமர் மோடி வெகுவாக ரசித்தார். பின்னர், புலிகள் பாதுகாப்பு திட்டம் குறித்து வனத் துறை அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

சுமார் 25 நிமிடங்கள் முகாமில் இருந்த பிரதமர், அங்கிருந்து சாலை மார்க்கமாக மசினகுடி வந்தார். அங்கு அவரைக் காண ஏராளமான பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

அவர்களை கண்ட பிரதமர் மோடி, தனது வாகனத்தில் இருந்து இறங்கி, பொதுமக்களுக்கு கையசைத்து, வணக்கம் தெரிவித்தார். காலை 11.50 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மைசூருவுக்கு புறப்பட்டு சென்றார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு, முதுமலை, மசினகுடியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கண்காணிப்பு பணியில் 2 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர்.

தம்பதிக்கு பிரதமர் அழைப்பு

பிரதமர் உடனான சந்திப்பு குறித்து பொம்மன் - பெள்ளி தம்பதி கூறியபோது, ‘‘எங்களது பணியை பிரதமர் பாராட்டினார். யானைகளை நாங்கள் வளர்த்த விதம் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார். எங்களை டெல்லிக்கு வருமாறு அழைத்துள்ளார். என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்றார். எங்கள் பகுதிக்கு பள்ளி, சாலை வசதி கேட்டோம். நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE