பந்திப்பூரை அதானிக்கு விற்றுவிடாதீர்கள் - பிரதமருக்கு காங்கிரஸ் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

பந்திர்ப்பூரை அதானிக்கு விற்றுவிட வேண்டாம் என்று பிரதமருக்கு கர்நாடக காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. முன்னதாக இன்று காலை பிரதமர் மோடி கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயத்திற்கு வருகை தந்தார்.

இதனையொட்டி கர்நாடகா காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோளை முன்வைத்தது. அதில், "அன்புள்ள நரேந்திர மோடி, பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு திட்டத்தை காங்கிரஸ் கட்சி 1973ல் அறிமுகப்படுத்தியது. அந்தத் திட்டத்தின் காரணமாகவே நாட்டில் புலிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்தது. அதன் பலனைத் தான் நீங்கள் இன்று சஃபாரி சென்று அனுபவிக்கிறீர்கள். இந்நிலையில் நாங்கள் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம். பந்திப்பூரை அதானிக்கு விற்றுவிடாதீர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் சாம்ராஜ் நகரில் கரோனா பரவல் அதிகமாக இருந்தபோது ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதியில்லாமல் 36 பேர் பலியாகினர். இதனை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ், "பந்திப்பூர் வந்த பிரதமர் நரேந்திர மோடி ஏன் சாம்ராஜ் நகருக்கு வரவில்லை. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்த குடும்பத்தாரை ஏன் சந்திக்கவில்லை. பிரதமருக்கு அங்கிருக்கும் எதிர்ப்பை சந்திப்பதில் பயமா?" என்று வினவியிருக்கிறது.

பிரதமர் மோடி, பந்திப்பூர் வனவிலங்கு பூங்காவில் 2 மணி நேரம் செலவழித்தார். அங்கே யானைகளுக்கு உணவளித்தார். புலிகள் பாதுகாப்புக்காக ஒரு புதிய தொலைநோக்கு பார்வை கொண்ட ஆவணத்தை வெளியிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE