பாஜகவில் இணைந்தார் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் பாஜகவில் இணைந்தார்.

சுதந்திர போராட்ட வீரரும் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ராஜாஜி எனப்படும் சி.ராஜகோபாலாச்சாரியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதிய சி.ஆர்.கேசவன், "நான் 2001ல் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்ததற்குக் காரணம் தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமே. அனைவரையும் உள்லடக்கிய தேசிய மறுமலர்ச்சியைக் காண வந்தேன். அத்தகைய கொள்கையின் மீது ஈர்ப்பு கொண்டே வந்தேன்.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவதில் எந்தவித மதிப்புமிகு அடையாளத்தையும் நான் உணரவில்லை. அதனால் இனியும் என்னால் கட்சியுடன் இணைந்து செயல்பட முடியாது என்று தோன்றுகிறது. இப்போது கட்சி இருக்கும் நிலைமை ஏற்றுக் கொள்வதற்கு இல்லை. அதனாலேயே தான் நான் தேசிய அளவில் எந்தப் பொறுப்பையும் சமீபமாக ஏற்கவில்லை. அதேபோல் இந்திய ஒற்றுமை யாத்திரையிலும் பங்கேற்கவில்லை" என்று குறிப்பிட்டு இருந்தார்.

காங்கிரஸில் இருந்து விலகிய பின் வேறு கட்சியில் இணையலாம் என்று சொல்லப்பட்டுவந்த நிலையில், தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். மத்திய அமைச்சர் வி.கே.சிங் மற்றும் பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் அனில் பலுனி முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். பிரதமர் மோடி சென்னைக்கு வந்திருக்கும் சூழலில் பாஜகவில் இணைந்த சி.ஆர்.கேசவன், "ஊழலற்ற நிர்வாகத்தால் இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE