பிரதமர் மோடி - அதானி தொடர்பை உச்ச நீதிமன்றக் குழுவால் வெளிக்கொணர முடியாது: காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையே இருக்கும் ஆழமான தொடர்பை உச்ச நீதிமன்ற விசாரணைக் குழுவால் வெளிக்கொண்டு வர முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அதானி விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் குழு அமைத்திருப்பதால், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியதை அடுத்து, காங்கிரஸ் இக்கருத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அதானி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவுக்கு வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் இருக்கும். அந்தக் குழுவால், பிரதமருக்கும் அதானிக்கும் இடையே இருக்கும் ஆழமான தொடர்பை வெளிக்கொண்டு வர முடியாது.

அதானிக்கும் பிரதமருக்கும் இடையேயான தொடர்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கி இருக்கின்றன. அனைத்திற்கும் விடை காண வேண்டுமானால், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையால்தான் முடியும். கடந்த 1992-ம் ஆண்டிலும், 2001-ம் ஆண்டிலும் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுக்கள் பயனுள்ளதாக இருந்திருக்கின்றன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதானி விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, அதானி விவகாரத்தில் குலாம் நபி ஆசாத், சிந்தியா, கிரண் ரெட்டி, ஹிமந்தா பிஸ்வாஸ், அணில் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர்களில் பலர், தற்போது பாஜகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE