அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை: சரத் பவார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடங்கின.

இந்நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ''ஒரு காலத்தில் அரசை குறை கூற வேண்டும் என்றால் டாடா, பிர்லா ஆகியோரை இழுப்பது வழக்கமாக இருந்தது. அந்த இடத்தில் தற்போது அம்பானியும், அதானியும் இருக்கிறார்கள்.

தொழிலதிபர்கள் குறிவைக்கப்படுவதை நான் ஏற்க மாட்டேன். ஒருவர் தவறிழைத்திருக்கிறார், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார் என்றால் ஜனநாயக முறைப்படி நீங்கள் அவர் மீது குற்றம்சாட்டலாம். ஆனால், அதுபோன்ற காரணம் இல்லாமல் தாக்குகிறீர்கள் என்றால், அதனை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பெட்ரோ கெமிக்கல் துறையில் அம்பானி மிக முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறார். நாட்டுக்கு அது தேவையில்லையா? மின் உற்பத்தித் துறையில் அதானி முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறார். நாட்டுக்கு அது தேவையில்லையா? நாட்டின் தேவையை கருதி சிலர் பொறுப்புடன் தங்கள் கடமையை செய்கிறார்கள். எனவே, நாட்டின் வளர்ச்சிக்காக அவர்கள் அளித்து வரும் பங்களிப்பை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

மத்திய அரசை குறைகூற வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் என பல முக்கியப் பிரச்சினைகள் இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் இவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும்.

அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் அளித்துள்ள அறிக்கை குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் குழு அமைத்திருக்கிறது. அந்த விசாரணைக் குழு நம்பகமானது; பாரபட்சமற்றது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவையற்றது. நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையை விட உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள விசாரணைக் குழு அதிக பயனுள்ளதாகவும், தீர்க்கமானதாகவும் இருக்கும்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE