தெலங்கானாவில் பிரதமர் நிகழ்ச்சியைப் புறக்கணிக்கும் முதல்வர் கேசிஆர்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) ரூ.11,300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். பிரதமர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிகளில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பங்கேற்க மாட்டார் எனவும் தெலங்கானா மாநிலம் வரும் பிரதமரை முதல்வர் சென்று வரவேற்கமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் எய்ம்ஸ், வந்தே பாரத் ரயில், நெடுஞ்சாலைகள் திட்டம் என ரூ.11,300 கோடி மதிப்பிலான பலவேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பரேட் மைதானத்தில் இதற்கான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அங்கிருந்து, பீபின் நகர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.1,350 கோடி செலவில் உருவாக்கப்படும் பீபின் நகர் எய்ம்ஸ் மருத்துவமனை தெலங்கானா மக்களுக்கு சுகாதார வசதியை அவர்களின் வீட்டு வாசலில் கிடைக்கச் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ரூ. 7,850 கோடி மதிப்பிலான, 5 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த நெடுஞ்சாலை திட்டங்கள், ஆந்திரா, தெலங்கானாவை இணைப்பதில் முக்கிய பங்கு வகித்து அந்த பிராந்தியங்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவிடும்.

அதேபோல், செகந்திராபாத் ரயில் நிலைய புனரமைப்புக்காக அடிக்கல் நாட்டி, ரயில்வே தொடர்பான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். மேலும் செகந்திராரபாத் - திருப்பதி வந்தேபாரத் எக்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். மூன்று மாத இடைவெளிக்குள் தெலங்கானாவில் தொடங்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் ரயில் இது. இந்த ரயில் இரண்டு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரத்தை சுமார் மூன்றரை மணிநேரம் குறைக்கும், குறிப்பாக யாத்ரீகர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பிரதமர் தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE