தெலங்கானா பாஜக தலைவர் ஜாமீனில் விடுதலை

By செய்திப்பிரிவு

கரீம்நகர்: 10-ம் வகுப்பு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கைதான தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்று வரும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஹிந்தி வினாத்தாள் கசிந்தது தொடர்பாக, கரீம்நகர் மக்களவை உறுப்பினரும், பாஜக தெலங்கானா மாநில தலைவருமான பண்டி சஞ்சய் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இதையடுத்து அவர் கரீம் நகர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பண்டி சஞ்சய் தரப்பில் ஜாமீன் மனு ஹனும கொண்டா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதே வேளையில், பண்டி சஞ்சயை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனால், நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் நிலவியது. இறுதியாக இரு தரப்பில் தீர விசாரணை நடத்திய நீதிபதி அனிதா, பண்டி சஞ்சய்க்கு இரவு 10 மணிக்கு ஜாமீன் வழங்குவதாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து நேற்றுகாலை அவர் கரீம் நகர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் அளித்த பேட்டியில், ‘‘வினாத்தாள் கசிவு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை
நியமனம் செய்து விசாரணைநடத்த முதல்வர் சந்திரசேகர ராவ் தயாரா?’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE