அதிகரிக்கும் கோவிட் பாதிப்பு: தயார் நிலையில் இருக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கோவிட் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, எச்சரிக்கையுடனும் தயார் நிலையிலும் இருக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தேசிய அளவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் புதிதாக 6,050 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 28,303 -ஆக அதிகரித்துள்ளது. அன்றாட பாதிப்பு முந்தைய நாள் (புதன்கிழமை) ஏற்பட்ட 5,335 பாதிப்பைவிட 13 சதவீதம் அதிகம்.

கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள், தலைமை மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் காணொளி வாயிலாக பங்கேற்றனர்.

அப்போது மன்சுக் மாண்டவியா கூறியதாவது: ''கோவிட் தொற்று அதிகரித்து வருவதால் அனைத்து மாநில அரசுகளும் எச்சரிக்கையுடனும் தயார் நிலையிலும் இருக்க வேண்டும். கோவிட் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி போடப்படுவதையும் அதிகரிக்க வேண்டும். மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கோவிட் பெருந்தொற்று காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக கடந்த காலங்களில் மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டதைப் போன்று செயல்பட வேண்டும்.

மருத்துவமனைகளின் தயார் நிலை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் மாநில சுகாதார அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் கோவிட் உள்கட்டமைப்புகளை உறுதிப்படுத்தத் தேவையான பயிற்சி ஒத்திகைகளை மாநில சுகாதார அமைச்சர்கள் மேற்கொள்ள வேண்டும்'' என்று மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE