பாஜகவில் இணைந்தார் ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண் ரெட்டி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்த கிரண் ரெட்டி இன்று (வெள்ளிக்கிழமை) பாஜகவில் இணைந்தார். தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முந்தைய ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் கடைசி முதல்வராக இருந்தவர் கிரண் ரெட்டி.

ஆந்திரப் பிரதேசத்தின் ராயலசீமா பகுதியைச் சேர்ந்த இவர், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கிரண் ரெட்டி, ஜெய் சமைக்யாந்திரா என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார். எனினும், அடுத்து வந்த தேர்தலில் எந்த தாக்கத்தையும் இந்த கட்சி ஏற்படுத்தாததை அடுத்து கடந்த 2018ல் அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த கிரண் ரெட்டி, நீண்ட காலமாக செயல்படாமல் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர், இன்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

62 வயதாகும் கிரண் ரெட்டி, பாஜகவில் இணைந்திருப்பதன் மூலம் ஆந்திரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திரப்பிரதேசத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு அடுத்து செல்வாக்கு உள்ள கட்சியாக பாஜக உள்ளது. அடுத்த ஆண்டு இந்த மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கிரண் ரெட்டி பாஜகவின் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு வளர்ச்சி திட்டங்களுக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் ஆதரவு அளிக்கும் நோக்கில் தனது செயல்பாடு இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். கிரண் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருப்பது அம்மாநிலத்தில் அக்கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE