ஏப்.14 வரை பஞ்சாப் போலீஸாரின் அனைத்து விடுமுறையும் ரத்து: அம்ரித்பால் சிங் அறிவிப்பால் டிஜிபி நடவடிக்கை

By செய்திப்பிரிவு

அமிர்தசரஸ்: வரும் ஏப்.14 வரை பஞ்சாப் போலீஸாரின் அனைத்து விடுமுறையையும் ரத்து செய்வதாக அம்மாநில காவல்துறை டிஜிபி அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தேடப்பட்டு வரும் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் 'அகால் தக்த்' சீக்கிய அமைப்பை ஏப்ரல் 14 ஆம் தேதியன்று பஞ்சாபில் 'சர்பத் கல்சா' நடத்துமாறு கூறியதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்து காவல்துறை இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங். இவர் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்'என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்ததாக இவர் மீது புகார் உள்ளது. இந்நிலையில் அவரை கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். கடந்த 18-ம் தேதி (மார்ச் 18) முதல் அம்ரித்பால் சிங் பல்வேறு வேடங்களில் சாலை, தெருக்களில் சுற்றித் திரியும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இருப்பினும் அவரை போலீஸாரால் இதுவரை கைது செய்ய இயலவில்லை. இதற்கிடையில் நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை விரைவில் எல்லோர் முன்பும் தோன்றுவேன் என்று அம்ரித்பால் சிங் வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியன்று பஞ்சாபில் 'சர்பத் கல்சா' நடத்துமாறு 'அகால் தக்த்' சீக்கிய அமைப்பிற்கு அம்ரித்பால் சிங் வலியுறுத்திக் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீஸாருக்கு வழங்கப்பட்ட அத்தனை விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இனி ஏப்ரல் 14க்குப் பின்னரே விடுமுறை கோரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமிர்தசரஸில் இருந்து படிண்டாவின் தம்தமா சாஹிப் வரை பேரணி நடத்துமாறும் அம்ரித்பால் சிங் கூறியதாக தகவல் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக எப்படியும் அம்ரித்பால் சிங் வருவார் என்று சந்தேகிக்கும் போலீஸார் அதிரடியாக அவரைக் கைது செய்ய முற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காகவே இந்த விடுமுறை ரத்து என்று விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE