பெங்களூரு: பத்ம ஸ்ரீ விருது பெற்ற பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நன்றி தெரிவித்துப் பேசியவை தன் மனதிலிருந்து வந்த வார்த்தைகள் என்றும் தனக்கு யாரும் அவ்வாறு பேசுமாறு சொல்லித்தரவில்லை என்றும் பித்ரி கலைஞர் ஷா ரசீத் அகமது குவாதாரி தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் மாளிகையில் 47 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அப்போது, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கர்நாடகாவைச் சேர்ந்த பித்ரி கைவினை கலைஞர் ஷா ரசீத் அகமது குவாதாரிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கினார். பித்ரி என்பது தகடில் செய்யப்படும் பாரம்பரிய கைவினைத் தொழில்.
விருது பெற்ற பின் ஷா ரசீத், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஐ.மு கூட்டணி ஆட்சி காலத்தில் நான் 10 ஆண்டுகளாக விண்ணப்பித்தும் எனக்கு விருது கிடைக்கவில்லை. பாஜக அரசு, முஸ்லிம்களுக்கு விருது வழங்கி கவுரவிக்காது என நினைத்து, நான் விருதுக்கு விண்ணப்பிப்பதை விட்டுவிட்டேன். நான் நினைத்தது தவறு என்பதை நீங்கள் நிருபித்துவிட்டீர்கள். நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன்’’ என்றார். இதைக் கேட்டு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் மகிழ்ச்சியுடன் சிரித்தனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். வரும் மே மாதம் 10 ஆம் தேதி கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனை முன்னிட்டே ஷா ரசீத் அகமது குவாதாரி உள்பட கர்நாடகாவில் அதிகளவிலானோர் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர் என்று நாங்கள் ஏற்கெனவே கூறியிருந்தோம். இப்போது ஷா ரசீத் அகமது குவாதாரி பேசியிருப்பதைப் பார்த்தால் யாரோ அவருக்கு அப்படிப் பேசும்படி சொல்லித் தந்துள்ளதைப் போல் தெரிகிறது என்று காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி கூறியிருந்தார்.
» “எனது மகன் பாஜகவில் இணைந்தது வேதனையளிக்கிறது” - ஏ.கே.அந்தோணி
» பந்தயத்துடன் கூடிய ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை
இந்நிலையில், குவாதாரி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், "நான் என் மனதிலிருந்தே பேசினேன். காங்கிரஸ் காலத்திலும் நான் விருதுக்காக முயற்சி செய்தேன். பாஜக ஆட்சி வந்தபின்னர் நான் வருந்தினேன். அதன்பின்னர் விருதுக்கு முயற்சிக்கவே இல்லை. ஆனால் பிரதமர் அது தவறு என்பதை நிரூபித்துவிட்டார். அதைத்தான் நான் அவரிடம் சொன்னேன். நான் என் விருது நிமித்தமாக எந்தவொரு தனிப்பட்ட அரசியல்வாதியையும் சந்திக்கவில்லை. நான் என் சுய முயற்சியால் அரசுக்கு என்னைப் பற்றிய குறிப்புகளுடன் விருதுக்காக விண்ணப்பித்தேன். முன்பெல்லாம் எனக்கு பதில் வராது. ஆனால் இப்போது எனக்கு பதில் வருகிறது.
எனக்கு 68 வயதாகிறது. எனக்கு யாரேனும் சொல்லிக் கொடுக்க நான் என்ன குழந்தையா? எனக்கு விருது வழங்குவதற்கான பரிசீலனை கடந்த ஆண்டே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் நான் அந்த ஆண்டு விண்ணப்பிக்கவே இல்லை. கடந்த ஜனவரி 25 ஆம் தேதி எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. எனக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதாகக் கூறினார்கள். அன்றைக்கு முழுவதும் நான் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினேன். எனக்கு தூக்கமே வரவில்லை. பிரதமர் நான் நினைத்தது தவறு என்பதை நிரூபித்திருக்கிறார்.
நான் காங்கிரஸ் கட்சிக்கே எப்போதும் வாக்களித்திருக்கிறேன். ஆனால் இப்போது பாஜகவின் பக்கம் திரும்பவுள்ளேன். என் தந்தையும் பித்ரி கலைஞர் தான். அவர் நானும் அதே கைவினைக் கலையை பின்பற்ற விரும்பவில்லை. கலைஞனின் வாழ்க்கை போராட்டம் நிறைந்தது என்பார். ஆனால் இன்று நான் மகிழ்கிறேன்" என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
34 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago