முதுகெலும்பு இல்லாமல்தான் காங்கிரஸில் இருக்க வேண்டும்: குலாம் நபி ஆசாத்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மூத்த அரசியல்வாதியான குலாம் நபி ஆசாத், தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதற்கு ராகுல் காந்தியே காரணம் என்று கூறியதுடன் கட்சியின் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதுமட்டுமல்லாமல், அரசியலில் யாருமே தீண்டத்தகாதவர் இல்லை என்று கூறியது அவர் பாஜக பக்கம் சாயலாம் என்ற சந்தேகங்களை வலுப்பெறச் செய்வதாக அமைந்துள்ளது.

'ஆசாத்' என்ற பெயரில் தனது சுயசரிதை நூலை வெளியிட்டுப் பேசிய குலாம் நபி ஆசாத், இனி ஒருபோதும் காங்கிரஸுக்கு திரும்பப்போவதில்லை என்று உறுதிபடத் தெரிவித்தார். மேலும் செய்தியாளர்கள் காங்கிரஸிலிருந்து விலக ராகுல் காந்தி காரணமா எனக் கேட்க, நிச்சயமாக. நீங்கள் காங்கிரஸிலிருந்தால் முதுகெலும்பு இல்லாமல்தான் இருக்க வேண்டும். அங்கே உங்களுக்கு அவ்வாறாக அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றார்.

அவருடைய பேட்டியிலிருந்து: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதற்கு ராகுல் காந்தியே காரணம். நீங்கள் காங்கிரஸில் இருந்தால் முதுகெலும்பே இல்லாமல் இருக்க வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில், குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் உச்ச நீதிமன்ற உத்தரவை மறுக்கும் வகையில் அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தை ராகுல் தூக்கி எறிந்தபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மவுனம் காத்தார். அப்போது காங்கிரஸ் கட்சி மவுனமாக இருந்தது. அந்தச் சட்டம் இருந்திருந்தால் இன்று ராகுலுக்கு இந்த நிலை வந்திருக்காது. அதைக் கிழ்த்தெறிந்தவருக்கு இன்று அது பயன்பட்டிருக்கும். உங்கள் வீட்டுச் சுவற்றில் நீங்களே ஓட்டை போட்டுவிட்டு அதன் வழியாக வெளியாட்கள் பார்க்கிறார்கள் என்று கூச்சல் போடுவது எந்த விதத்தில் நியாயமாகும். காங்கிரஸ் அதைத்தான் செய்கிறது.

ட்விட்டரில் அரசியல் செய்பவர்களைவிட நான் 2000 சதவீதம் காங்கிரஸ்காரனாகத்தான் இருக்கிறேன். என் கொள்கைகளின் அடிப்படையில் நான் 24 கேரட் காங்கிரஸ்காரன். அவர்கள் 18 கேரட் கூட தேறமாட்டார்கள். நான் கட்சியிலிருந்து வெளியே வந்த பின்னர் என்னை சோனியா காந்தி மீண்டும் அழைக்கவில்லை. சோனியா காந்தி வசம் முடிவெடுக்கும் அதிகாரங்கள் இருந்திருந்தால் நான் இன்று இங்கே இப்படி தனித்து நிற்க மாட்டேன்.

நான் மீண்டும் காங்கிரஸில் இணையமாட்டேன். அவர்களுக்கு என்னைப்போன்றோர் தேவையில்லை. அவர்களுக்கு ட்விட்டரில் வேகமாக இயங்குபவர்கள்தான் தேவை. இந்திய ஒற்றுமை யாத்திரையால் காங்கிரஸ் 500 சீட் வெல்லும் என்று ட்விட்டரில் பேசுவோர் தான் அவர்களுக்குத் தேவை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத் தேர்தலுக்காக நான் பாஜகவில் இணைவேனா என்ற கேள்விகள் எழுகின்றன. அரசியலில் யாருமே தீண்டத்தகாதவர் இல்லை. இவ்வாறு குலாம் நபி ஆசாத் பேசினார்.

காங்கிரஸ் கண்டனம்: குலாம் நபி ஆசாத்தின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் பவன் கேரா, 50 ஆண்டுகளாக தான் எந்தக் கொள்கையை எதிர்த்தாரோ அதைத்தான் இப்போது குலாம் நபி ஆசாத் பின்பற்றிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் தொண்டர்களால் கடவுளாகப் பார்க்கப்பட்டார். ஆனால் இப்போது அவர் ஒரு களிமண் பொம்மை என்று நிரூபித்துள்ளார். காங்கிரஸ் கட்சி அவருக்கு அள்ளிக் கொடுத்தது. அவர் கட்சியை இன்று சபிக்கிறார். 50 ஆண்டுகளாக கட்சியில் இருந்துவிட்டு துரோகம் செய்துள்ளார். கட்சி இனி எப்படி தொண்டர்களை நம்பும். கடந்த இரண்டு நாட்களாக விடுதலை, விடுதலை என்று முழங்கிக் கொண்டே யாருக்கோ அடிமையாக இருந்து கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE