பிரதமர் மோடியின் கல்வி தகுதி சர்ச்சை தேவையற்றது - என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் கருத்து

By செய்திப்பிரிவு

மும்பை: பிரதமர் மோடியின் கல்வித் தகுதி பற்றிய சர்ச்சை தேவையற்றது என என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பட்டம் பெற்றதுகுறித்த பிரச்சினையை ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் எழுப்பியுள்ள நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச்(என்சிபி) சேர்ந்த அஜித் பவார் கூறியிருப்பதாவது:

2014-ம் ஆண்டு மக்களவைக்குநரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டபோது அவருக்கு பட்டம் இருக்கிறதா என்பது குறித்து யாரும் கவலைப்படவில்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தனக்கென தனி பாணியை உருவாக்குவதில் அவர் வெற்றிபெற்றார். பாஜகவின் வெற்றி மோடியின் தலைமையினால் மட்டுமே சாத்தியமானது. அதுதவிர, இந்திய அரசியலுக்கும் பட்டப்படிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்த சர்ச்சை தேவையற்றது.

விவசாய நெருக்கடி, வேலை வாய்ப்பு மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு போன்ற மக்களை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கு பதிலாக பிரதமர் மோடியின் பட்டம் குறித்த விவாதம் பூதாகரமாகியுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

பாஜக-சிவசேனா இணைந்து நடத்தும் சாவர்க்கர் கவுரவ யாத்திரை அரசியல் நாடகம். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருப்பதால், சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்கப்படுவதை துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE