டெல்லியில் பூடான் மன்னருக்கு வரவேற்பு!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இரண்டு நாள் அரசு பயணமாக பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்ங்யெல் வாங்சுங் இந்தியா வந்துள்ளார். நேற்று காலை டெல்லி விமான நிலையம் வந்த ஜிக்மே கேசரை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார்.

பின்னர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது. பூடான் அரசர் ஜிக்மே இந்தியாவுக்கு வந்துள்ளதை வரவேற்கிறோம். மாட்சிமை தாங்கிய அவரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கைகுலுக்கி வரவேற்றார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த 2 நாள் பயணத்தின்போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்டோரை பூடான் அரசர் ஜிக்மே சந்தித்துப் பேச வுள்ளார். 2017-ல் இந்தியா, சீனா இடையே ஏற்பட்ட டோக்லாம் பிரச்சினைக்குப் பிறகு பூடான், இந்தியா இடையே நட்புறவு அதிகரித்துள்ளது.

இந்தியாவின் நட்புறவு நாடுகளில் பூடானுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. 50 வருடங்களுக்கு மேலாக இந்த நட்புறவு நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு விஷயங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூடான் அரசர் ஜிக்மே இந்தியாவுக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE