டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு: மனிஷ் சிசோடியாவின் காவல் ஏப்ரல் 17 வரை நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்மாநில முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டித்து ரூஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

டெல்லியில் புதிய மதுபான கொள்கை நடைமுறைப்படுத்தியதில் சில நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதும், அதற்கு பிரதிபலானாக ரூ.100 கோடி வரை லஞ்சம் பணம் கைமாறியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதில், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உள்ளிட்ட பலருக்கு தொடர்புள்ளது விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவரை சிபிஐ கைது செய்தது.

கடந்த வாரம் இந்த வழக்கு ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிசோடியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை, மேலும் இந்த வழக்கில் வேறு சில நபர்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதால் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த நிலையில், சிசோடியாவின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து திகார் சிறையிலிருந்து அழைத்துவரப்பட்ட சிசோடியா நேற்று ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, சிபிஐ தொடர்ந்த வழக்கில் மனிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 17-ம் தேதி வரை நீடித்து சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் நேற்று உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE