சூரத்: அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப். 3) சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது ஜாமீனை நீட்டித்த நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை இம்மாதம் 13-ம் தேதிக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி (52), ‘மோடி’ என்று பெயர் உள்ளவர்கள் குறித்து அவர் விமர்சித்தார். வங்கிக் கடன் மோசடியில் வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி, ஐபிஎல் கிரிக்கெட் மோசடி புகாரில் சிக்கி, வெளிநாடு தப்பிய லலித் மோடி என்று குற்றம் செய்தவர்கள் பெயர்கள் எல்லாம் ‘மோடி’ என்றே முடிகிறது என்று பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி பெயரையும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி இழிவுபடுத்திவிட்டதாகப் புகார்கள் எழுந்தன. ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்மேற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக விசாரணையில் இருந்தநிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா தீர்ப்பளித்தார். இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500-வது பிரிவுகளின் கீழ் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. எனினும், உடனடியாக ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீனும் அளித்தது. அத்துடன், மேல்முறையீடு செய்வதற்காக சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரண்டு மனுக்கள்: சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று (ஏப்.3) மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுடன் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஒன்று தண்டனையை ரத்து செய்வது தொடர்பானது, இரண்டாவது தீர்ப்பினை ரத்து செய்வது தொடர்பானது. இந்த நிலையில், சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி, வழக்கை ஏப்ரல் 13-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராகுல் காந்தியின் வழக்கறிஞர்கள் கூறும்போது, "செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. தண்டனைக்கு தடை விதிக்கலாமா வேண்டாமா என்பது விசாரணைக்கு பின்னரே முடிவு செய்ய முடியும் என்றும், அடுத்த விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராகத் தேவையில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது” என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம். இந்தப் போராட்டத்தில் உண்மையே என் ஆயுதம். உண்மையே எனக்கான உறுதுணை" என்று தெரிவித்துள்ளார்.
இந்த மேல்முறையீட்டிற்காக இன்று (ஏப்.3) ராகுல் காந்தி, தனது சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வத்ராவுடன் சூரத் வந்திருந்தார். அவர்களுடன் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல், இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் சூரத் சென்றிருந்தனர்.
மத்திய அமைச்சர்கள் கண்டனம்: காங்கிரஸின் இந்த செயலைக் கண்டித்துள்ள மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு , நீதித் துறை மீது காங்கிரஸ் கட்சி தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்க முயல்வதாகக் குற்றம்சாட்டியிருந்தார். நீதித் துறையை அச்சுறுத்தும் நோக்கில் அவர்கள் நாடகம் நடத்திக்கொண்டிருப்பதாகவும், இது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், நாட்டைவிட ஒரு குடும்பம் மேலானது என்று காங்கிரஸ் கட்சி கருதுவதாகவும் அவர் விமர்சித்தார்.
ராகுல் காந்தியின் மேல்முறையீடு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ், முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் ஆகியோர் சிறைக்குப் போனபோது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எத்தனை பேர் உடன் சென்றார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் முதல்வர்கள் விளக்கம்: பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல், ''நான் எனது தலைவருடன் (ராகுல் காந்தி) செல்கிறேன். இது எப்படி நீதித் துறைக்கு அழுத்தத்தை கொடுப்பதாக ஆகும்? (ராம நவமி ஊர்வலத்தில் நிகழ்ந்த கலவரங்களின் மூலம்) மேற்கு வங்கத்திலும், பிஹாரிலும் பாஜகவினர் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிராக பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ இதுவரை மக்களுக்கு எந்த ஒரு வேண்டுகோளையும் முன்வைக்கவில்லை'' என குற்றம்சாட்டினார்.
''நீதித் துறைக்கு யாராலும் அழுத்தம் கொடுக்க முடியாது. காங்கிரஸ் மிகப் பெரிய எதிர்க்கட்சி. ராகுல் காந்தி நாட்டின் மிகப் பெரிய தலைவர். ராகுல் காந்தியோடு நாங்கள் செல்வது அரசியல் நாடகமல்ல. நாங்கள் அவரோடு இருக்கிறோம்'' என இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் விளக்கம்: கட்சித் தலைவர்கள் சூரத் சென்றிருப்பது குறித்து விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் கட்சித்தலைர் மல்லிகார்ஜுன கார்கே, இது பலத்தை நிரூப்பிக்கும் செயல் இல்லை. அவர் (ராகுல் காந்தி) நாட்டிற்காக போராடுகிறார். அவர்கள் (தலைவர்கள்) ராகுலின் போராட்டத்தில் பங்கேற்று அவருக்கு ஆதரவளிக்க அங்கு சென்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் மார்ச் 23ம் தேதி ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கிய நிலையில், அடுத்த நாள் (மார்ச்24) ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழந்ததாக மக்களவைச் செயலகம் அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago