இந்தியாவை ஊழலில் இருந்து விடுவிப்பதே சிபிஐ-யின் முக்கியப் பொறுப்பு: பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஊழலில் இருந்து இந்தியாவை விடுவிப்பதே சிபிஐ அமைப்பின் முக்கியப் பொறுப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சிபிஐ-யின் வைர விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, ''இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற வேண்டுமானால், அதற்கேற்ற தொழில்முறை அமைப்புகளின் பங்களிப்பு மிகவும் முக்கியம். அந்த அமைப்புகளின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற முடியாது. எனவே, சிபிஐ அமைப்புக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.

ஜனநாயகம் மற்றும் நீதிக்கு மிகப்பெரிய தடைக்கல்லாக இருப்பது ஊழல்தான். ஊழலில் இருந்து இந்தியாவை விடுவிப்பதே சிபிஐ அமைப்பின் மிக முக்கிய பொறுப்பு. கறுப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துக்களுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழலுக்கு எதிராக மட்டுமல்ல; அதற்கான காரணத்திற்கு எதிராகவும் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சிபிஐ தனது பணிகள் மூலமாகவும் நுட்பங்கள் மூலமாகவும் மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. தற்போதும்கூட, தீர்க்கப்படாத வழக்குகள் என்றால், அதனை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது'' எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா, சிபிஐ இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE