பிஹாரில் வன்முறை எதிரொலி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேரணி ரத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிஹாரில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த மோதல் தொடர்பாக இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிஹார் ஷரிப்பீன் காவல் துறை கண்காணிப்பாளர் அசோக் மிஸ்ரா தெரவித்துள்ளார்.

வன்முறை நடைபெற்ற பகுதி களில் அமைதி நிலவுவதாகவும், வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிஹார் போலீஸார் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பிஹாருக்கு இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை வருகை தந்தார். பிஹார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோர்கரிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா நிலைமையை கேட்டறிந்தார்.

அப்போது, கூடுதல் துணை ராணுவப் படைகளை அனுப்பி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமித் ஷா உறுதியளித்தார்.

நேபாளம் மற்றும் பூட்டான் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியாவின் எல்லைப் படையான ஷாஸ்த்ரா சீமா பாலுக்கு செல்ல திட்டமிட்டிருந்த அமித் ஷா அந்தப் பயணத்தை தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்தார்.

வன்முறையை அடுத்து பிஹார் மாநிலத்தின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்ளவிருந்த சசாரம் பேரணியும் ரத்து செய்யப்பட்டது.

அமித் ஷாவின் வருகையை தடுக்கும் நோக்கத்துடனேயே சசாரத்தில் பிஹார் மாநில அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்ததாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை முதல் நிதிஷ் குமார் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE