தண்டனைக்கு தடைகோரி சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அளித்த 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்ய உள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று விமர்சித்திருந்தார்.

இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிப்பதாக மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா கடந்த மார்ச் 23ம் தேதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, ராகுல் காந்தி தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் வர்மா, அவருக்கு 30 நாள் ஜாமீன் வழங்கி, அதுவரை தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டார்.

ராகுல் காந்தி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்.பி பதவி மார்ச் 24ம் தேதி பறிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை மக்களவைச் செயலாளர் உத்பல் குமார் சிங் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய உள்ளார். இதற்காக அவர் சூரத் செல்ல உள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உடன் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மேல்முறையீடு மனுதாக்கலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் மாநிலங்களவை உறுப்பினரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி மேற்பார்வையில் நடக்கும் என்றும், இந்த மேல்முறையீட்டு மனுவை சூரத்தில் உள்ள மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ். சீமா தாக்கல் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE