கோச்சிங் சென்டர்கள் கலாச்சாரம் | திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி; மத்திய அமைச்சர் விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற உயர் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களைக் குறிவைத்து தனியார் கோச்சிங் சென்டர்கள் பணம் பறிப்பது உள்ளிட்ட மாணவர்களைச் சுரண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பற்றி மாநிலங்களவையில் திமுக எம்.பி., டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்க்கார் அளித்த பதில்: மாணவர்களின் கற்றல் திறனை ஒரே நேரத்தில் மொத்தமாக மதிப்பிடும் நடைமுறைதான் தற்போது நாடு முழுவதும் இருக்கிறது. இந்த நடைமுறைதான் தற்போதைய ‘கோச்சிங் கலாச்சாரத்திற்கு' வழிவகுக்கிறது. இந்த நிலையை மாற்றி, மாணவர்களின் கற்றல் திறனை ஒரே நேரத்தில் மதிப்பிடுவதற்கு பதிலாக, தொடர்ச்சியான இடைவெளியில் மதிப்பிடுவதன் மூலம் அவர்களது ஒட்டுமொத்த திறனை மேம்படுத்தலாம் என்ற அடிப்படையில்தான் புதிய கல்விக் கொள்கை – 2020 வடிவமைக்கப்பட்டது.

கோச்சிங் சென்டர் கலாச்சாரத்திலிருந்து மாணவர்களை திசை திருப்பி அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளிக்கும் நோக்கத்தில், சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறையினருக்கு இணைய தளங்கள் மூலமாக செயல்முறை கற்றல் வகுப்புகளுக்காகவே ‘ஸ்வயம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவர்கள் ஜேஇஇ., நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பாடங்கள் மற்றும் கிராபிக்ஸ் விளக்கங்களுடன் கூடிய பயிற்சியை அளிக்கும் வகையில் தனி டிடிஎச் சேனல் ஒன்று இயங்கிவருகிறது.

இது தவிர, மாணவர்கள் தங்களை சுயமதிப்பீடு செய்யும் வகையிலும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையிலும் இணையதளம் வாயிலாக பயிற்சி அளிக்கும் வகையில் SATHEE என்ற பிரத்யேகப் போர்ட்டல் ஒன்றும் 2022 ஏப்ரல் மாதம் முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஆங்கிலம், இந்தி மற்றும் பத்து பிராந்திய மொழிகளில் இந்த போர்ட்டல் இயங்குவதால் பல லட்சம் மாணவர்கள் பயனடைகிறார்கள்.

அத்துடன், நுழைவுத் தேர்வுக்கு அவசியமே இல்லாமல், பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போதே சேரும் வகையில் நான்காண்டு கால இளங்கலை அறிவியல் பட்டப் படிப்புகளை சென்னை ஐஐடி. நடத்தி வருகிறது. டேடா சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆகிய இரண்டு பாடங்களில் இந்தப் பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும்போதே, அந்தப் பாடத்திட்டத்துக்கு உள்ளேயே அமைந்த நான்கு வார கால தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தாலே பிளஸ் டூ படிப்பில் தேர்ச்சியடைந்த பிறகு, அந்த மாணவர்கள் இந்தப் பட்டப்படிப்புகளில் சேரலாம்.

இவ்வாறு அமைச்சர் சுபாஸ் சர்க்கார் பதிலளித்தார்.

ஆனாலும், பணம் பறிக்கும் தனியார் கோச்சிங் சென்டர்களைக் கட்டுப்படுத்தவும், அவர்களை கண்காணிக்கவும் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று கனிமொழி சோமு எழுப்பிய பிற கேள்விகளுக்கு நேரடியாக எந்த பதிலையும் மத்திய அமைச்சர் அளிக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE