புதுடெல்லி: எதிர்க்கட்சி முகாமில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக, காங்கிரஸ் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முதல் முறையாக திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.மேலும், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு எதிராக நடந்த கறுப்பு உடைப் போரட்டத்திலும் கலந்து கொண்டனர்.
சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின் நாடாளுமன்றம் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு கூடியது. அப்போது, ராகுலின் தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக கறுப்பு உடை போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. முன்னதாக அதானி, ராகுல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்த ஆலோசிக்க, மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முதல் முறையாக இந்தக் கூட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த ப்ராசன் பானர்ஜி, ஜவஹர் சிர்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து திரிணாமூல் காங்கிரஸ் தரப்பில், “ராகுல் காந்தி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதால், அதற்காக மட்டும் இந்த ஆதரவு அளிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. "முதல் நாளிலிருந்தே நாங்கள் அனைத்து போராட்டங்களில் இருந்தும் விலகியே இருந்தோம். எதிலும் நாங்கள் கலந்து கொள்ளவில்லை. அனைவருக்கும் எதிராக ஜனநாயகத்திற்கு விரோதமாக தாக்குதல் நடக்கும்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற எங்கள் முடிவின் வெளிப்பாடு இது" என்று திரிணாமூல் எம்பி ஜவஹர் சிர்கர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், "இந்த விவகாரத்தில் எங்களை ஆதரிக்கும் அனைவருக்கும் எனது நன்றி. நேற்றும் நன்றி தெரிவித்தேன். இன்றும் தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகத்தை, அரசியலமைப்பை, மக்களைக் காப்பாற்றும் போராட்டத்தில் இணை முன்வருபவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம். எங்களை ஆதரிக்கும் மக்களுக்கும் எங்களின் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருக்கும், அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிரீய சமிதி கட்சி உறுப்பினர்களும், சிவசேனா கட்சி (உத்தவ் தாக்கரே அணி) உறுப்பினர்களும் காங்கிரஸ் கறுப்புச் சட்டை போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதற்கிடையில், 'நான் சாவர்க்கர் இல்லை' என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் உத்தவ் தாக்கரே, "விநாயக் சாவர்க்கரை விமர்சனம் செய்வது எதிர்க்கட்சிகளுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும்” என்று ஞாயிற்றுக்கிழமை கூறியது குறிப்பிட்டத்தக்கது.
இந்த நிலையில், ராகுலின் தகுதி நீக்கம் குறித்து கருத்து தெரிவித்திருந்த மம்தா, "மோடியின் நவீன இந்தியாவில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் பாஜகவின் இலக்குகளாக மாறியுள்ளனர். குற்றப் பின்னணியுள்ள பாஜக தலைவர்கள் அமைச்சர்களாக இருக்கும்போது, எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களின் பேச்சுகளுக்காக தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இன்று நாம் நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கான சாட்சிகளாக மாறியிருக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் காங்கிரஸுன் இடதுசாரிகளும், பாஜவுடன் மறைமுக கூட்டணி வைத்திருப்பதாக திரிணாமூல் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். மேலும், 2024 நாடாளுமன்றத்தேர்தலில் பாஜக, காங்கிரஸிடமிருந்து விலகியே இருக்கப்போவதாக கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி குறித்து பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு வியாழக்கிழமை 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து வெள்ளிக்கிழமை தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago