100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு: மத்திய அரசு அரசாணை வெளியீடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2023-24 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.

இந்த நிலையில், இந்த வேலைகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்ட தொகையில் இருந்து கூடுதலாக ரூ.7 முதல் ரூ.26 வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்.1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதில், மாநிலங்களுக்கு மாநிலம் ஊதிய உயர்வு வேறுபடுகிறது. 2 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், ஹரியாணா மாநிலத்தில் தினசரி ஊதியம் ரூ.331-ல் இருந்து ரூ.357 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ரூ.231-ல் இருந்து ரூ.255 ஆகவும், பிஹார், ஜார்க்கண்டில் ரூ.210-ல் இருந்து ரூ.228 ஆகவும், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் ரூ.204-ல் இருந்து ரூ.221 ஆகவும் தினசரி ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2022-23 நிதி ஆண்டுக்கு இந்ததிட்டத்தின்கீழ் தினசரி ஊதியம் ரூ.281 வழங்கப்படுகிறது. வரும் 2023-24 நிதி ஆண்டுக்கு ஊதியம் ரூ.294 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இது 4.63 சதவீத உயர்வு ஆகும்.

ராஜஸ்தானுக்கு அதிக அளவாக 10.39% ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. கேரளா (2.2%),கர்நாடகா (2.27%), மணிப்பூர் (3.59%), அருணாச்சல பிரதேசம் (3.7%), நாகாலாந்து (3.7%), அசாம் (3.93%), தமிழ்நாடு (4.63%), புதுச்சேரி (4.63%)உள்ளிட்ட மாநிலங்களுக்கு 5 சதவீதத்துக்குகுறைவாகவே ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE