ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பு காங்கிரசை மேலும் வலுப்படுத்தும்: ப. சிதம்பரம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பு சம்பவம் காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்தும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள நேர்காணலில், ''அவசரநிலை காலகட்டத்தைப் போன்ற ஒரு நிலையில் நாடு இருக்கிறது. தற்போது இருப்பது அறிவிக்கப்படாத அவசரநிலை. இந்திரா காந்தி காலத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. தற்போது அதில் வித்தியாசம் ஏதும் இருக்கிறதா? ஊடகங்கள் மற்றும் ஊடகவியாலாளர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே இயங்க வேண்டிய நிலை உள்ளது.

பாஜகவின் பிரதான இலக்கு காங்கிரஸ்தான். காங்கிரசை தேர்தல் களத்தில் இருந்து அகற்றிவிட்டால் பிராந்திய கட்சிகளை எளிதாக அகற்றிவிடலாம் என்று அக்கட்சி நினைக்கிறது. இரண்டுமே நடக்காது. காங்கிரஸ் கட்சியை ஒழிக்க முடியாது. அதேபால், பிராந்திய கட்சிகளும் எழுந்து நின்று போராடும்.

கடந்த சில நாட்களாக நிகழ்ந்து வருபவை காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலிமையை கூட்டியுள்ளது. நாங்கள் யாருடன் போராடுகிறோம் என்பதை நாங்கள் அறிவோம். பாஜகவுக்கு எதிரான போராட்டம், ஒற்றுமைக்கான நோக்கம் போன்றவை காங்கிரசை வலுப்படுத்தும். வலிமையான காங்கிரஸ் வரும் 2024 தேர்தலில் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கும்.

ராகுல் துணிச்சலுடன் செயல்படுகிறார். அவரிடம் அச்சம் என்பதே இல்லை. அவரது உறுதி எத்தகையது என்பது இந்திய ஒற்றுமை யாத்திரையில் வெளிப்பட்டது. காங்கிரஸ் கட்சி பெரியண்ணன் மனநிலையில் நடக்கவில்லை. தற்போதைய அரசியல் சூழலின் அடிப்படையில் பொதுவான புரிந்துணர்வுடன், பொதுவான இலக்கை நோக்கி பரஸ்பர மரியாதையுடன் எதிர்க்கட்சிகள் பயணப்பட வேண்டும் என்றே காங்கிரஸ் விரும்புகிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதும்கூட கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் பரந்த மனப்பான்மையுடனேயே நடத்தியது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிராந்திய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும்'' என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE