உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது: பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

99-வது மனதின் குரல் வானொலி உரையில் உடல் உறுப்பு தானம், சூரிய சக்தி பயன்பாடு, பல்வேறு துறைகளில் இந்திய நாட்டை சேர்ந்த பெண்களின் செயல்பாடு, காசி தமிழ் சங்கமம், அம்பேத்கர், ரமலான், ராம நவமி, காஷ்மீர், கரோனா என பல விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். அவரது உரை விவரம்:

“எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களை மீண்டும் ஒருமுறை மனதார வரவேற்கிறேன். இன்று இந்த உரையாடலைத் தொடங்கும் வேளையில், என் மனதில் நிறைய உணர்வுகள் பிரவாகமாகப் பெருகிக் கொண்டிருக்கின்றன. மனதின் குரலுடனான நம்முடைய இந்த இனிமையான இணைவு, 99-வது பகுதியாக மலரவிருக்கிறது.

பொதுவாக, 99-வது பகுதி என்பது மிகவும் கடினமானதாக இருக்கும் என்று கூறப்படுவதுண்டு. கிரிக்கெட்டிலே இதை நெர்வஸ் நைண்டீஸ், அதாவது பதட்டமான 90கள் என்றும். மிகவும் கடினமான படிக்கல்லாக பார்ப்பார்கள். ஆனால், பாரதத்தின் மக்களின் மனதின் குரல் எனும் போது, அங்கே அதற்கே உரித்தாக இருக்கும் உத்வேகம் என்பது அலாதியானது. அதே போல மனதின் குரலின் நூறாவது பகுதி குறித்து நாட்டு மக்களின் மத்தியில் பெரும் உற்சாகம் இருப்பது எனக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏராளமான செய்திகள் எனக்கு வருகின்றன. தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. இன்று நாம் சுதந்திரத்தின் அமுத காலத்தைக் கொண்டாடி வரும் வேளையில், புதிய உறுதிப்பாடுகளோடு முன்னேறி வரும் வேளையில், 100-வது மனதின் குரலின் பகுதி தொடர்பாக, உங்களுடைய கருத்துக்கள், ஆலோசனைகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன், தவிப்போடு காத்திருக்கிறேன். காத்திருப்பு என்பது என்னவோ எப்போதும் இருந்தாலும் கூட, இந்த முறை காத்திருப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது. உங்களுடைய கருத்துக்களும், ஆலோசனைகளும் தான் ஏப்ரல் மாதம் 30-ம் தேதி ஒலிபரப்பாகவிருக்கும் 100-வது பகுதி மனதின் குரலை நினைவில் கொள்ளத்தக்க விசேஷமானதாக ஆக்கக்கூடியது.

எனக்கு மிகவும் பிரியமான நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம், பிறருக்கு சேவையாற்றவே தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த ஆயிரக்கணக்கான மனிதர்களைப் பற்றி உரையாடியிருக்கிறோம். பலர் எப்படிப்பட்டவர்கள் என்றால், பெண்களின் கல்விக்காகவே தங்களின் மொத்த ஓய்வூதியத்தையும் அளித்தவர்கள். சிலர் தங்களுடைய வாழ்க்கை முழுவதற்குமான சம்பாத்தியத்தையும் சுற்றுச்சூழல் மற்றும் பிராணிகள் நல சேவைக்காகவே அர்ப்பணம் செய்தவர்கள். நமது தேசத்திலே பொது நலனுக்கு மிக உயரிய இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. பிறர் நலன் பொருட்டு, தங்களுடைய அனைத்தையும் எந்த மறு சிந்தனையும் இல்லாமல் தானமளிப்பார்கள். ஆகையால் தானே நமக்கெல்லாம் சிறுவயதிலேயே சிபிச்சக்கரவர்த்தி, ததீசி போன்ற உறுப்பு தானம் புரிந்தவர்களின் கதைகள் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

உடல் உறுப்பு தானம்: நண்பர்களே, நவீன மருத்துவ அறிவியலின் இந்தக் காலத்திலே, உறுப்பு தானம் என்பது யாரோ ஒருவருக்கு உயிர் அளிக்கக்கூடிய மிகப்பெரிய வழியாக ஆகியிருக்கிறது. ஒரு நபர் இறந்த பிறகு தனது உடலை தானமளித்தல், அவரால் 8 முதல் 9 நபர்களுக்கு, புதிய ஒரு வாழ்க்கை கிடைப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நிறைவை அளிக்கும் விஷயம் என்னவென்றால், இன்று தேசத்திலே உறுப்பு தானத்தின்பால் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்பது தான். 2013-ம் ஆண்டிலே நமது தேசத்திலே, உடலுறுப்பு தானம் 5000-திற்கும் குறைவான அளவிலே தான் இருந்தது. ஆனால் 2022-ம் ஆண்டிலே, இந்த எண்ணிக்கை அதிகரித்து 15,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டி விட்டது. உடலுறுப்பு தானம் செய்யும் நபர்கள், அவர்களுடைய குடும்பங்கள், இப்படிச் செய்வதன் மூலம் உண்மையிலே மிகவும் புண்ணியம் செய்திருக்கிறார்கள்.

நண்பர்களே, வெகுகாலமாகவே பெரிய புண்ணிய காரியங்கள் செய்வோரின் மனதின் குரலை அறிந்து கொள்ள வேண்டும், அவற்றை நாட்டு மக்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்பட்டு கொண்டிருந்தேன். அந்த வகையில் இன்றைய மனதின் குரலில் நம்மோடு அன்பே உருவான ஒரு சிறுமி, ஒரு அழகுக் குட்டியின் தந்தை, அவளுடைய தாய் இருவரும் நம்மோடு இணைந்திருக்கிறார்கள்.

தந்தையாரின் பெயர் சுக்பீர் சிங் சந்து, தாயின் பெயர் சுப்ரீத் கவுர். இந்தக் குடும்பம் பஞ்சாபின் அமிர்தசரசில் வசித்து வருகிறது. ஏராளமான பிரார்த்தனைகளுக்குப் பிறகு அவர்களுக்கு ஒரு அழகுச் சிலை, ஒரு செல்லப் பெண் பிறந்தாள். வீட்டில் இருந்தவர்கள் அவளுக்கு அபாபத் கவுர் என்று பெயரிட்டார்கள். அபாபத்தின் பொருள், பிறருக்குப் புரியப்படும் சேவை, பிறரின் கஷ்டங்களைப் போக்குவது இவற்றோடு தொடர்புடையது. அபாபத் பிறந்து வெறும் 39 தினங்களே ஆன போது அவள் இந்த உலகை நீத்துப் பேருலகுக்குப் பயணப்பட்டாள். ஆனால், சுக்பீர் சிங் சந்து மற்றும் அவரது மனைவி சுப்ரீத் கவுரும், அவர்களுடைய குடும்பத்தாரும் மிகவும் உத்வேகம் அளிக்கக்கூடிய தீர்மானத்தை மேற்கொண்டார்கள். 39 நாட்களே வாழ்ந்த அவர்களுடைய செல்லத்தின் உடல் உறுப்புகளை தானம் அளிப்பது தான் அந்தத் தீர்மானம். நம்மோடு தொலைபேசி இணைப்பில் சுக்பீர் சிங் அவர்களும், அவருடைய மனைவியும் இணைந்திருக்கிறார்கள். அவரோடு உரையாடுவோம் வாருங்கள்.

பிரதமர் மோடி: சுக்பீர் அவர்களே வணக்கம்.
சுக்பீர்: வணக்கம் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, சத் ஸ்ரீ அகால்.
பிரதமர் மோடி: சத் ஸ்ரீ அகால், சத் ஸ்ரீ அகால் ஜி, சுக்பீர் அவர்களே, இன்றைய மனதின் குரல் தொடர்பாக நான் சிந்தித்துக் கொண்டிருந்த போது, அபாபத் பற்றிய விஷயம் எத்தனை உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது என்றால், இதைப்பற்றி நீங்களே கூறினால் மிகவும் சிறப்பான ஒரு தாக்கம் ஏற்படும்; ஏனென்றால், ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது என்றால், நிறைய கனவுகள், நிறைய சந்தோஷங்களைத் தன்னோடு அது கொண்டு வருகிறது. ஆனால், அந்தக் குழந்தை இத்தனை விரைவாகப் பிரிந்து விடும் எனும் போது எத்தனை கஷ்டமாக இருக்கும், எத்தனை கடினமாக உணர்வீர்கள் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. நீங்கள் இப்போது மேற்கொண்டிருக்கும் முடிவை மேற்கொள்ளத் தூண்டியது எது, எப்படி அதை மேற்கொண்டீர்கள் என்பது பற்றியெல்லாம் நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ஐயா.
சுக்பீர்: சார், இறைவன் எங்களுக்கு மிகவும் அருமையான ஒரு குழந்தையை அளித்தார், மிகவும் இனிமையான செல்லக்குட்டி எங்கள் வீட்டிற்கு வருகை புரிந்தாள். அவளுடைய மூளையில் நரம்புகள் இணைந்து ஒரு முடிச்சுப் போல ஆகியிருக்கிறது என்றும், இதனால் அவளுடைய இதயத்தின் அளவு பெரிதாகி வருவதாகவும், அவள் பிறந்தவுடனேயே எங்களுக்குத் தெரிய வந்தது. நாங்கள் திகைத்துப் போனோம், குழந்தையின் உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கிறது, மிக அழகாக அவள் இருக்கிறாள், ஆனால் இத்தனை பெரிய பிரச்சினையைத் தாங்கிப் பிறந்திருக்கிறாள் எனும் வேளையில், முதல் 24 மணி நேரம் வரை ரொம்ப நன்றாகவே, இயல்பாகவே இருந்தாள். திடீரென்று அவளுடைய இருதயம் செயலாற்றுவதை நிறுத்தி விட்டது. ஆகையால் நாங்கள் விரைவாக அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கே அவளை உயிர்ப்பித்து விட்டார்கள். அப்படி இருந்தபோதும் அதை புரிந்து கொள்ள சமயம் பிடித்தது. அவளுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை என்ன, இத்தனை பெரிய சிக்கல், ஒரு சின்னஞ்சிறிய குழந்தையின் இதயத்தில் கோளாறு என்று பிறகு தெரிந்தபோது, நாங்கள் அவளை சிகிச்சைக்காக பிஜிஐ சண்டீகருக்கு கொண்டு போனோம். அங்கே அந்தக் குழந்தை மிகவும் நெஞ்சுரத்தோடு சிகிச்சைக்காகப் போராடினாள். ஆனால், இத்தனை சிறிய வயதிலே சிகிச்சை அளிப்பது சாத்தியமாக இருக்கவில்லை. மருத்துவர்கள் அவளை உயிர்ப்பிக்க அதிகம் முயற்சித்தார்கள். ஆறு மாத காலம் வரை அவள் உயிரை இழுத்துப் பிடித்தால் கூட, அவளுக்கு அறுவை சிகிச்சை செய்வது குறித்து யோசிச்சிருக்க முடியும். ஆனால் இறைவனுடைய எண்ணம் வேறாக இருந்தது. வெறும் 39 நாட்கள் ஆன நிலையிலேயே மருத்துவர்கள், அவளுக்கு மீண்டும் இதயத்தில் கோளாறு ஏற்பட்டு விட்டது என்பதால் இப்போது நம்பிக்கை குறைவாக இருப்பதாகத் தெரிவித்தார்கள். நானும், என் மனைவியும் எங்கள் மகள் மிகவும் தைரியத்தோடு எதிர்கொண்டதைப் பார்த்தோம். அவள் பிரிந்து விடுவாள் என நினைத்த போது மீண்டு வந்தாள். அப்போது எங்களுக்குப் தோன்றிய விஷயம் என்னவென்றால் இந்தக் குழந்தையோட வருகைக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அப்படி நினைத்த போது தான் எங்களுக்கு அதற்கான விடை கிடைத்தது. நாங்கள் குழந்தையின் உறுப்புக்களை தானமாக அளிப்போம் என்ற முடிவுக்கு வந்தோம். வேறு ஒருவருடைய வாழ்க்கையில் ஒளியேற்றப்படுமே என்று தீர்மானித்த பிறகு. நாங்கள் பிஜிஐ-யின் நிர்வாகப் பிரிவோடு தொடர்பு கொண்டோம். இத்தனைச் சின்ன சிசுவிடமிருந்து சிறுநீரகங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள இயலும் என்று எங்களுக்கு வழிகாட்டினார்கள். இறைவன் எங்களுக்கு மனோபலத்தை கொடுத்தார்.
பிரதமர் மோடி: குருமார் அளித்த படிப்பினையை நீங்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறீர்கள். சுப்ரீத் அவர்கள் இருக்கிறார்களா? அவர்களோடு என்னால் உரையாட முடியுமா?
சுக்பீர்: நிச்சயமாக சார்.
சுப்ரீத்: ஹலோ
பிரதமர் மோடி: சுப்ரீத் அவர்களே உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.
சுப்ரீத்: வணக்கம் சார். வணக்கம். நீங்கள் எங்களோடு உரையாடுவது என்பது எங்களுக்கு மிகப்பெரிய கௌரவம் சார்.
பிரதமர் மோடி: நீங்கள் இத்தனை மகத்தான செயல் புரிந்திருக்கிறீர்கள். நாம் பேசுவது அனைத்தையும் இந்த தேசம் கேட்கும். இதனால் கருத்தூக்கம் அடைந்து இன்னும் பிறரின் உயிரைக் காக்கப் பலரும் முன்வருவார்கள் என்பதே என் கருத்து. அபாபத்துடைய இந்தப் பங்களிப்பு, இது மிகப் பெரியது அம்மா.
சுப்ரீத்: சார், இது கடவுள் கொடுத்த தைரியத்தில் தான் இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்க முடிந்தது.
பிரதமர் மோடி: குருமார்களின் கிருபை இல்லாமல் எதுவுமே நடக்க முடியாது.
சுப்ரீத்: கண்டிப்பா சார். கண்டிப்பா.
பிரதமர் மோடி: சுக்பீர் அவர்களே, நீங்கள் மருத்துவமனையில் இருந்தபோது, ஆளையே உலுக்கும் இந்தச் செய்தியை மருத்துவர்கள் உங்களுக்கு தெரிவித்தபோது, அதன் பிறகும் கூட ஆரோக்கியமான மனதோடு நீங்களும் சரி, உங்கள் மனைவியும் சரி இத்தனை பெரிய முடிவை எடுத்துள்ளீர்கள். உண்மையிலேயே அபாபத்தோட அர்த்தம் சாதாரணமாகச் சொன்னால் பிறருக்கு உதவுவதுதான். குழந்தை அபாபத் இந்தப் பணியை கண்டிப்பாக செய்துவிட்டாள். ஆனால், நான் நீங்கள் அதை தீர்மானித்த கணம் குறித்து தெரிந்துக் கொள்ள விரும்புறேன்.
சுக்பீர்: சார் உண்மையில எங்க குடும்ப நண்பரான பிரியா அவர்கள் தன்னோட உடல் உறுப்பை தானமளிச்சாங்க. அவரிடமிருந்து எங்களுக்கு உத்வேகம் ஏற்பட்டது. ஒருத்தர் இறந்துவிட்டார் என்றால் அவருடைய உடல் எரியூட்டப்படுகிறது. இல்லை என்றால் புதைக்கப்படுகிறது. ஆனால், அவங்களோட உடலுறுப்புகள் உதவிகரமா இருக்கும். அப்படீன்னா, அது நல்ல செயல் தானே. உங்க மகள் தான் இந்தியாவோட மிக இளமையான உறுப்பு தானம் செய்தவர்னு மருத்துவர்கள் எங்ககிட்ட சொன்ன போது எங்களுக்குப் பெருமையா இருந்துச்சு. எந்த நல்ல பெயரை, எங்களைப் பெத்தவங்களுக்கு இதுநாள் வரை எங்களால் வாங்கிக் கொடுக்க முடியலையோ, அதை ஒரு சின்னஞ்சிறிய சிசுவான எங்கள் தெய்வமகள் எங்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கா. அது மிகப்பெரிய விஷயம். இன்னைக்கு உங்களோட நாங்க பேசிட்டு இருக்கும் போதும் நாங்க ரொம்ப பெருமிதமாக உணர்றோம்.
பிரதமர் மோடி: சுக்பீர் அவர்களே இன்று உங்கள் மகளோட ஒரே ஒரு அங்கம் தான் உயிர்ப்போடு உள்ளது என்று இல்லை. உங்கள் மகள் மனித சமூகத்தின் அமர காதைகளின் அமரத்துவம் வாய்ந்த பயணியாகி உள்ளார். தன்னோட உடல் உறுப்பு வாயிலாக அவள் இன்றும் வாழ்ந்து வருகிறார். இந்த பரிசுத்தமான காரியத்துக்காக, நான் உங்களையும், உங்களோட மனைவியையும், உங்க குடும்பத்தாரையும் போற்றுகிறேன்.
சுக்பீர்: நன்றி சார்.

நண்பர்களே, உடலுறுப்பு தானம் செய்யத் தூண்டும் நினைப்பு, நாம் மறையும் போது கூட, வேறு ஒருவருக்கு நல்லது நடக்கட்டும், ஒருவருடைய உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்ற மிகப்பெரிய ஆர்வம் தான். யாரெல்லாம் உறுப்பு தானத்திற்கான காத்திருப்பில் இருக்கிறார்களோ, காத்திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் கழிப்பது எத்தனை கடினமான காரியம் என்பதை அவர்கள் நன்கறிவார்கள். அப்படி உடலுறுப்பு தானம் செய்யும் ஒருவர் கிடைத்துவிட்டார் என்றால், அவர்களை இறைவனின் வடிவங்களாகவே பார்க்கிறார்கள்.

பார் போற்றும் சிங்கப் பெண்கள்: எனதருமை நாட்டுமக்களே, இது நவராத்திரி காலம், சக்தியை உபாசனை செய்யும் நேரம் இது. இன்று, பாரதத்தின் வல்லமை, புதிய முறையில் சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது, இதிலே பெரிய பங்களிப்பு என்றால், நமது பெண் சக்தியுடையது. இன்றைய நிலையில், இப்படி பல எடுத்துக்காட்டுக்கள் வெளிப்பட்டிருக்கின்றன. நீங்கள் சமூக ஊடகங்களில், ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவ் குறித்து நிச்சயம் பார்த்திருக்கலாம். சுரேகா அவர்கள், ஒரு சாகச வீராங்கனை என்ற வகையில் மேலும் ஒரு சாதனையைப் புரிந்திருக்கிறார். வந்தே பாரத் விரைவு ரயிலின் முதல் பெண் லோகோ பைலட்டாக அவர் ஆகியிருக்கிறார். இந்த மாதம்தான், தயாரிப்பாளர் குனீத் மோங்காவும், இயக்குநர் கார்த்திகி கோன்ஸால்வ்ஸ் ஆகியோரின் ஆவணப்படமான ‘The Elephant Whisperers’ ஆஸ்கர் விருதினை வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். தேசத்தின் மேலும் ஒரு சாதனை, பாபா அணு ஆய்வு மையத்தின் அறிவியலாளர், சகோதரி ஜோதிர்மயி மொஹந்தி அவர்களும் சாதனை படைத்திருக்கிறார். ஜோதிர்மயி அவர்களுக்கு வேதியியலும், வேதியியல் பொறியியலும் என்ற துறையில் IUPAC-ன் சிறப்பான விருது கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பாரதத்தின் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான பெண்கள் கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையை வென்று புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. அதே போல அரசியலின் பால் நீங்கள் நோக்கினால், ஒரு புதிய தொடக்கம் நாகாலாந்திலே நிகழ்ந்திருக்கிறது. நாகாலாந்தில் 75 ஆண்டுகளில் முதல் முறையாக இரண்டு பெண் உறுப்பினர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைந்திருக்கிறர்கள். இவர்களில் ஒருவரை நாகலாந்து அரசு அமைச்சராகவும் ஆக்கியிருக்கிறது. அதாவது, மாநிலத்தின் மக்களுக்கு முதல் முறையாக ஒரு பெண் அமைச்சர் கிடைத்திருக்கிறார்.

நண்பர்களே, சில நாட்கள் முன்பாக, துருக்கியிலே பேரிடர் ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் பெருநாசத்திற்கிடையே அங்கிருக்கும் மக்களுக்கு உதவி புரிய சென்றிருந்த வீராங்கனைகளைச் சந்திக்க நேர்ந்தது. அவர்களுடைய திறமைகள் குறித்து உலகமே பாராட்டி வருகிறது. பாரதம், ஐ.நா. மிஷன் என்ற முறையில் அமைதிப் படையில் பெண்கள் பிரிவு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறது.

இன்று, தேசத்தின் பெண்கள், நமது முப்படைகளிலும், தங்களுடைய வீரத்தின் வெற்றிக் கொடியை ஓங்கிப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். குரூப் கேப்டன் ஷாலிஜா தாமி, போர்ப்பிரிவில் ஆணை பிறப்பிக்கும் தகுதி படைத்த முதல் பெண் விமானப்படை அதிகாரியாக ஆகியிருக்கிறார். அவரிடம் கிட்டத்தட்ட 3000 மணிநேரம் விமானத்தை ஓட்டிய அனுபவம் இருக்கிறது. இதைப் போலவே இந்திய ராணுவத்தின் நெஞ்சுரம் மிக்க கேப்டன் சிவா சௌஹானும், சியாச்சினிலே பணியாற்றும் முதல் பெண் அதிகாரியாக ஆகியிருக்கிறார். பூஜ்யத்திற்குக் கீழே 60 டிகிரி செல்ஷியஸ் என்ற பருவநிலை இருக்கும் சியாச்சினிலே, சிவா, மூன்று மாதங்களுக்குப் பணியாற்றுவார்.

நண்பர்களே, இந்தப் பட்டியல் எத்தனை நீளமானது என்றால், இங்கே இதுபற்றிய விவாதம் கூட கடினமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள், நமது பெண் செல்வங்கள். இன்று பாரதம் மற்றும் பாரதத்தின் கனவுகளுக்கு சக்தி அளித்து வருகிறார்கள். பெண்சக்தியின் இந்த ஆற்றல் தான் வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு ஆகும்.

சூரிய சக்தி பயன்பாடு: என் மனம்நிறை நாட்டுமக்களே, இப்போதெல்லாம் உலகம் முழுவதிலும் தூய்மையான எரிசக்தி, புதுப்பிக்கவல்ல எரிசக்தி பற்றி நிறைய பேசப்படுகின்றன. உலக மக்களை நான் சந்திக்கும் போது, இந்தத் துறையில் பாரதத்தின் சாதனை படைக்கும் வெற்றியைப் பற்றிக் கண்டிப்பாக முன்வைக்கிறேன். குறிப்பாக, பாரதம், சூரிய சக்தித் துறையில் எந்த வகையில் விரைவாக முன்னேறி வருகிறது என்பதே கூட ஒரு மிகப்பெரிய சாதனையாகும். பாரத நாட்டு மக்கள், பல நூற்றாண்டுகளாக சூரியனோடு விசேஷமான தொடர்பு கொண்டவர்கள். நமது நாட்டிலே, சூரியசக்தி தொடர்பாக இருக்கும் விஞ்ஞானப் புரிதல், சூரிய உபாசனை தொடர்பான பாரம்பரியங்கள் ஆகியன, பிற இடங்களிலே குறைவானவையாகவே காணப்படுகின்றன. இன்று, நாட்டு மக்கள் அனைவரும் சூரிய சக்தியின் மகத்துவத்தைப் புரிந்து கொள்கிறார்கள். தூய்மையான எரிசக்தி தொடர்பாகத் தங்களுடைய பங்களிப்பை அளிக்க விரும்புகிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அனைவரின் முயற்சி என்பதன் இந்த உணர்வு தான் பாரதத்தின் சூரியத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.

மகாராஷ்டிரத்தின் புனேவில் இப்படிப்பட்ட ஒரு அருமையான முயல்வு என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இங்கே MSR-Olive Housing Society-யைச் சேர்ந்தவர்கள் சமூகத்தவருக்கு குடிநீர், லிஃப்ட், விளக்குகள் போன்ற சமூகப் பயன்பாட்டு விஷயங்களைப் பொறுத்தமட்டிலே சூரியசக்தியையே பயன்படுத்துவோம் என்று தீர்மானித்தார்கள். இதன் பிறகு இந்த குடியிருப்பு சமூகத்தினர் அனைவரும் இணைந்து சோலார் பேனல்களை பொருத்தினார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 90,000 கிலோவாட் மணியளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 40,000 ரூபாய் சேமிக்கப்படுகிறது. இந்தச் சேமிப்பின் ஆதாயம் சமூகத்தின் அனைவருக்கும் கிடைக்கிறது.

நண்பர்களே, புனேவைப் போலவே தமன் தீவில் இருக்கும் தீவ் பகுதி ஒரு வித்தியாசமான மாவட்டம். அங்கே இருப்போரும் ஒரு அற்புதமான செயலைப் புரிந்திருக்கிறார்கள். தீவ் என்பது சோம்நாத்துக்கு அருகே இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பகல் பொழுதின் அனைத்துத் தேவைகளுக்கும் 100 சதவீதம் தூய்மையான எரிசக்தியைப் பயன்படுத்தும் பாரதத்தின் முதல் மாவட்டம் தீவ் என்று ஆகியிருக்கிறது. தீவ் பகுதியின் இந்த வெற்றியின் மந்திரம், அனைவரின் முயற்சியே ஆகும். ஒரு காலத்தில் இங்கே மின்சார உற்பத்திக்கான சாதனங்கள் ஒரு சவாலாக இருந்தது. மக்கள் இந்தச் சவாலுக்கான தீர்வை ஏற்படுத்தும் வகையில், சூரிய சக்தியைத் தேர்ந்தெடுத்தார்கள். இங்கே பயனற்ற நிலம் மற்றும் பல கட்டிடங்களில் சோலார் பேனல் பொருத்தப்பட்டன. இந்தத் தகடுகள் மூலம், தீவ் பகுதியில் பகல் வேளையில் தேவைப்படும் மின்சார சக்தியை காட்டிலும் கூடுதலாக மின்சாரம் உற்பத்தியாகி வருகிறது. இந்த திட்டம் வாயிலாக, மின்சாரம் வாங்க ஆன செலவு கிட்டத்தட்ட 52 கோடி ரூபாய் இப்போது சேமிக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழலும் பெரிய அளவில் பாதுகாக்கப்படுகிறது.

நண்பர்களே, புனே மற்றும் தீவும் சாதித்துக் காட்டியிருக்கின்றன. இப்படிப்பட்ட முயல்வுகள் நாடெங்கிலும், மேலும் பல இடங்களிலும் நடந்து வருகின்றன. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விஷயத்தில் இந்தியர்கள் எத்தனை புரிந்துணர்வு உடையவர்கள் என்பது இதிலிருந்து நன்கு விளங்குகிறது. மேலும், நம்முடைய தேசம், எந்த வகையில் எதிர்காலத் தலைமுறையினருக்காக விழிப்போடு செயல்படுகிறது என்பதும் தெளிவாகிறது. இவை போன்ற அனைத்து பிரயாசைகளுக்கும், நான் என் இதயபூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் சங்கமம்: எனதருமை நாட்டுமக்களே, நமது தேசத்திலே, காலத்திற்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலே, பல பாரம்பரியங்கள் மலர்ந்திருக்கின்றன. இந்த பாரம்பரியங்கள் தாம், நமது கலாச்சாரத்தின் வல்லமையை அதிகரிக்கின்றன, இதைப் புத்தம் புதிதாக என்றும் துலங்கும்படி இருக்கத் தேவையான பிராண சக்தியை அளிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர்தான் இப்படிப்பட்ட ஒரு பாரம்பரியம் காசியிலே தொடங்கப்பட்டது. காசி தமிழ்ச் சங்கமத்திலே காசி மற்றும் தமிழ்நாட்டிற்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் வரலாற்று மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் கொண்டாடப்பட்டன. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வு நமது தேசத்திற்கு பலத்தை அளிக்கிறது. நாம் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அறிந்து கொள்ளும் போது, கற்கும் போது, ஒற்றுமை உணர்வு மேலும் ஆழமாகப் பாய்கிறது. ஒற்றுமையின் இந்த உணர்வோடு கூடவே, அடுத்த மாதம் குஜராத்தின் பல்வேறு பாகங்களிலும் சௌராஷ்ட்ர தமிழ்ச் சங்கமம் நடைபெற இருக்கிறது. சௌராஷ்ட்ர தமிழ்ச் சங்கமம், ஏப்ரல் 17 முதல் 30 வரை நடக்கும். மனதின் குரலின் சில நேயர்கள் கண்டிப்பாக யோசித்துக் கொண்டிருப்பார்கள், குஜராத்தின் சௌராஷ்டிரத்துக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே என்ன தொடர்பு இருக்க முடியும் என்று. உள்ளபடியே, பல நூற்றாண்டுகள் முன்னரே கூட, சௌராஷ்டிரத்தின் பலர் தமிழ்நாட்டின் பல்வேறு பாகங்களில் குடியேறி இருக்கிறார்கள். இவர்களை இன்றும் கூட சௌராஷ்ட்ரீ தமிழர்கள் என்ற பெயரிட்டு அழைக்கிறார்கள். அவர்களுடைய உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, சமூகப் பழக்கங்கள் ஆகியவற்றில், இன்றும் கூட ஆங்காங்கே சௌராஷ்டிரத்தின் சில அம்சங்கள் இணைகின்றன. இந்த நிகழ்ச்சியை மெச்சி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். மதுரையில் வசிக்கும் ஜெயச்சந்திரன் அவர்கள், ஒரு நீண்ட, உணர்வுப்பூர்வமான விஷயத்தை எழுதியிருக்கிறார்.

“ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, முதன் முறையாக ஒருவர் சௌராஷ்டிர தமிழர்களின் இந்த உறவுகளைப் பற்றி எண்ணமிட்டிருக்கிறார். சௌராஷ்டிரத்திலிருந்து தமிழ்நாட்டில் வந்து குடியேறியிருப்பவர்கள் பற்றி விசாரித்திருக்கிறார்” என்று எழுதியிருக்கிறார். ஜெயச்சந்திரன் அவர்களின் இந்தச் சொற்கள், ஆயிரக்கணக்கான தமிழ் சகோதர சகோதரிகளின் வெளிப்பாடு.

லாசித் போர்ஃபுகன்: நண்பர்களே, மனதின் குரல் நேயர்களுக்கு, நான் அசாம் உடன் தொடர்புடைய ஒரு செய்தியைப் பற்றிக் கூற விரும்புகிறேன். இதுவும் கூட, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வுக்கு பலம் சேர்க்கிறது. நமது வீர லாசித் போர்ஃபுகன் அவர்களின் 400-வது பிறந்த நாளை நாம் கொண்டாடி வருகிறோம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். வீரர் லாசித் போர்ஃபுகன், முகலாய ஆட்சியின் கொடூரமான பிடியிலிருந்து, குவாஹாடிக்கு விடுதலை பெற்றுத் தந்தார். இன்று தேசம், இந்த மாபெரும் வீரனின் அசகாய சூரத்தனத்தை தெரிந்து கொண்டு வருகிறது. சில நாட்கள் முன்பாக, லாசித் போர்ஃபுகனின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்ட கட்டுரை எழுதும் இயக்கம் நடத்தப்பட்டது. இதற்கு கிட்டத்தட்ட 45 இலட்சம் மக்கள் கட்டுரைகளை அனுப்பியிருந்தார்கள் என்பதை அறிந்து உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். அதே வேளையில் இது ஒரு கின்னஸ் உலக சாதனைப் பதிவையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பது உங்களுக்கு மகிழ்ச்சியையும் அளிக்கலாம். மேலும் மிகவும் பெரிய விஷயம், அதிக உவகையைத் தரும் விஷயம் என்னவென்றால், வீர லாசித் ப்போர்ஃபுகன் மீது எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் கிட்டத்தட்ட 23 பல்வேறு மொழிகளில் எழுதி அனுப்பப்பட்டிருக்கிறது. இவற்றில், அஸாமிய மொழியைத் தவிர இந்தி, ஆங்கிலம், பாங்க்லா, போடோ, நேபாளி, சம்ஸ்கிருதம், சந்தாலி போன்ற மொழிகளைச் சேர்ந்த மக்கள் கட்டுரைகளை அனுப்பியிருக்கிறார்கள். நான் இந்த முயற்சியில் பங்கெடுத்த அனைவருக்கும் என் இதயப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் கனிவு நிறை நாட்டுமக்களே, காஷ்மீர் அல்லது ஸ்ரீநகர் பற்றிய விஷயம் எனும் போது, அங்கிருக்கும் பள்ளத்தாக்குகள், டால் ஏரி ஆகியவற்றின் சித்திரங்கள் நம் கண் முன்னே வந்து போகும். நம்மில் அனைவருமே அந்த ஏரியின் சுந்தரக் காட்சிகளின் ரம்மியத்தை அனுபவிக்க விரும்புவோம். ஆனால், அந்த ஏரியில் மேலும் ஒரு சிறப்பான விஷயம் உண்டு. இந்த ஏறியல் தனது சுவையான தாமரைத் தண்டுகளுக்காகப் பெயர் போனது. தாமரைத் தண்டுகளை தேசத்தின் பல்வேறு இடங்களில், பல்வேறு பெயர்களிட்டு அழைப்பார்கள். காஷ்மீரில் இவற்றை நாதரூ என்றழைப்பார்கள். காஷ்மீரத்தின் நாதரூவுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தத் தேவையைக் கருதிப் பார்த்து, ஏரியின் நாதரூவைப் பயிர் செய்ய விவசாயிகள் ஒரு விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பினை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த அமைப்பிலே கிட்டத்தட்ட 250 விவசாயிகள் இணைந்திருக்கிறார்கள். இன்று இந்த விவசாயிகள், தங்களின் நாதரூவை அயல்நாடுகளுக்கு அனுப்பத் தொடங்கி விட்டார்கள். சில நாட்கள் முன்பு தான் இந்த விவசாயிகள், இரண்டு தொகுதிப்புகளை ஐக்கிய அரபு எமிரேட்டுகளுக்கு அனுப்பியிருக்கிறார்கள். இந்த வெற்றி காஷ்மீருக்குப் பெயரை ஈட்டிக் கொடுப்பதோடு, பல விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கிறது.

காஷ்மீர் விவசாயிகள்: நண்பர்களே, காஷ்மீர் மக்களின் விவசாயத்தோடு தொடர்புடைய மேலும் ஒரு முயற்சி, இப்போது தனது வெற்றியின் மணத்தைப் பரப்பி வருகிறது. நான் வெற்றியின் மணம் என்று ஏன் கூறுகிறேன் என்று தானே நீங்கள் யோசிக்கிறீர்கள். ஆம், விஷயம் நறுமணம் பற்றியது. சுகந்தம் தொடர்பானது. உண்மையில், ஜம்மு-காஷ்மீரத்தின் டோடா மாவட்டத்தின் ஒரு பகுதி தான் பதர்வாஹ். இங்கே இருக்கும் விவசாயிகள், பல தசாப்தங்களாக, மக்காச்சோளத்தின் பாரம்பரியமான விவசாயத்தைச் செய்து வந்தார்கள்; ஆனால், சில விவசாயிகள், சற்று வித்தியாசமானதைச் செய்ய யோசித்தார்கள். அவர்கள் மலர் சாகுபடியில் ஈடுபட்டார்கள். இன்று, இங்கே, கிட்டத்தட்ட 2500 விவசாயிகள், லேவண்டர் மலர் சாகுபடி செய்யத் தொடங்கி விட்டார்கள். இவர்களுக்கு மத்திய அரசின் அரோமா மிஷன் மூலம் உதவிகள் கிடைத்து வருகின்றது. இந்தப் புதிய விவசாயமானது, விவசாயிகளின் வருமானத்தில் பெரிய ஏற்றத்தை அளித்து, இன்று லேவண்டரோடு சேர்த்து, இவர்களின் வெற்றியின் மணமும், தொலைதூரங்கள் வரை பரவிக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே, காஷ்மீர் பற்றிப் பேசும் போது, தாமரை பற்றிப் பேசும் போது, மலர்களைப் பற்றிப் பேசினாலோ, மணம் பற்றிப் பேசும் போது, தாமரை மலர் மீது வீற்றிருக்கும் அன்னை சாரதை பற்றிய நினைவு வருவது மிகவும் இயல்பான விஷயம் இல்லையா. சில நாட்கள் முன்பாகத் தான், குப்வாடாவில் அன்னை சாரதைக்கு ஒரு அருமையான ஆலயம் மக்கள் வழிபாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. முன்னொரு சமயத்தில், சாரதா பீடத்தை தரிசிக்க மக்கள் சென்று வந்த அதே பாதையில் தான் இந்த ஆலயம் இப்போது எழுப்பப்பட்டிருக்கிறது. உள்ளூர் மக்கள் இந்தக் கோயில் கட்டுமானத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். இந்த சுபகாரியத்தில் ஈடுபட்ட, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் பலப்பல வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

கரோனா விழிப்புணர்வு: எனதருமை நாட்டுமக்களே, இந்த முறை மனதின் குரல் இதோடு நிறைவு பெறுகிறது. அடுத்த முறை, மனதின் குரலின் 100-வது பகுதியில் உங்களை நான் சந்திக்கிறேன். நீங்கள் அனைவரும், உங்களின் ஆலோசனைகளை அவசியம் அனுப்புங்கள். ரமலான் புனித மாதமும் தொடங்கவிருக்கிறது. இன்னும் சில நாட்களில் ஸ்ரீ இராம நவமி திருநாளும் வரவிருக்கிறது. இதன் பிறகு மஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை ஆகியவையும் வரும். ஏப்ரல் மாதத்தில் நாம், பாரதத்தின் இரண்டு மாபெரும் ஆளுமைகளின் பிறந்த தினங்களைக் கொண்டாட இருக்கிறோம். இந்த இருபெரும் ஆளுமைகள் – மகாத்மா ஜோதிபா புலே, பாபா சாஹேப் அம்பேத்கர் ஆகியோர் தாம். இந்த இரண்டு மாமனிதர்களும், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளுக்கு முடிவு கட்ட, அசாத்தியமான பங்களிப்புக்களை நல்கினார்கள். இன்று, சுதந்திரத்தின் அமுதக் காலத்தில், இப்படிப்பட்ட மாமனிதர்களிடமிருந்து கற்கவும், தொடர்ந்து உத்வேகமடைவதும் அவசியமாகிறது. நாம் நமது கடமைகளை, அனைத்திலும் முதன்மையானவையாக கொள்ள வேண்டும். நண்பர்களே, இப்போது சில இடங்களில், கரோனா அதிகரித்து வருகிறது. ஆகையால் நீங்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும். தூய்மை பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும். அடுத்த மாதம், மனதின் குரலின் 100-வது பகுதியில், நாம் மீண்டும் இணைவோம். அதுவரை விடை தாருங்கள் அன்புநிறை நாட்டுமக்களே, நன்றி, வணக்கம்” என தனது உரையை பிரதமர் நரேந்திர மோடி நிறைவு செய்து கொண்டார்.

தகவல்: பிஐபி

வானொலி உரை லிங்க்..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்