'மை பேபி, உன் அன்பு விலை மதிப்பற்றது' - ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சிறையிலிருந்து காதல் கடிதம் எழுதிய சுகேஷ்

By செய்திப்பிரிவு

டெல்லி: டெல்லி திஹார் சிறையில் இருக்கும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு காதல் கடிதம் எழுதியுள்ளார்.

'எனது பேபி ஜாக்குலின் பெர்னாண்டஸ்' எனத் தொடங்கும் அக்கடிதத்தில், ``என் பொம்மா இந்த பிறந்த நாளில் உன்னை ஆயிரம் மடங்கு மிஸ் செய்கிறேன். என்னைச் சுற்றியிருக்கும் உனது எனர்ஜியையும் மிகவும் மிஸ் செய்கிறேன். அதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால், என்மீது உனக்கு இருக்கும் அன்பு ஒருபோதும் முடிவடையாதது என்பது எனக்குத் தெரியும். உங்கள் அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என்பதையும் நான் அறிவேன். .

எனக்கு அதற்கு எந்த ஆதாரம் தேவையில்லை பேபி. என் புட்ட பொம்மா நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று உனக்குத் தெரியும். நீயும் உனதும் காதலும் என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த விலை மதிப்பில்லா பரிசு. என்ன வந்தாலும் உனக்காக நான் இங்கே இருக்கிறேன். உன் இதயத்தைக் கொடுத்ததற்கு நன்றி. லவ் யூ பேபி.

மேலும் எனது பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்த எனது ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள், வாழ்த்துகள் வந்துள்ளன. நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன், நன்றி" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வழக்கின் பின்னணி: பெங்களூரைச் சேர்ந்தவர், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர். செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களுடன் நட்பு இருப்பதாகக் கூறி தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக இவர் மீது புகார்கள் உள்ளன.

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு இருந்தபடியே, தொழிலதிபர் ஒருவர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்து, சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது. மேலும் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி உள்ளிட்ட நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் பணமும், பரிசும் இவர் வழங்கியது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. சுகேஷ், ஜாக்குலினை காதலித்து வந்துள்ளார். இதனிடையே, இதே வழக்கில், ஜாக்குலினும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE