ராகுல் பாணியில் ‘மோடி’ குறித்து 2018-ல் ட்வீட் செய்த குஷ்பு தன்னிலை விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 2019-ல் மோடி சமூகம் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், பாஜகவில் அங்கம் வகிக்கும் குஷ்பு, கடந்த 2018-ல் நீரவ் மோடி, லலித் மோடி, நமோ என்றால் ஊழல் என குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். அது இப்போது பரவலாக கவனம் பெற்று வைரல் ஆனது. இந்நிலையில், அது குறித்து தனது தரப்பு விளக்கத்தை குஷ்பு கொடுத்துள்ளார்.

ராகுல் என்ன பேசினார்? - காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது சூரத்தின் பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி, குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, "எல்லா திருடர்களுக்கும் எப்படி மோடி என்பது பொதுவான குடும்பப்பெயராக இருக்கிறது?" என்று பேசியிருந்தார். இதன்மூலம் அவர் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமானப்படுத்தியுள்ளார் என குற்றம் சுமத்தியிருந்தார். இந்த வழக்கில்தான் ராகுலுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2018-ல் குஷ்பு என்ன சொன்னார்? - “மோடி எல்லா இடங்களிலும் இருக்கிறார். ஆனால் இது என்ன? மோடி என்ற குடும்பப்பெயர் கொண்டவர்கள் ஊழலுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்” என ட்வீட் மூலம் குஷ்பு தனது கருத்தை தெரிவித்திருந்தார். நீரவ் மோடி, லலித் மோடி, நமோ என்றால் ஊழல் எனவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். இதுதான் தற்போது வைரலாகி உள்ளது. இந்தக் கருத்தை குஷ்பு சொன்ன போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அதன் பின்னர் கடந்த 2020-ல் பாரதிய ஜனதா கட்சியில் அவர் இணைந்தார்.

“என்னுடைய பழைய ட்வீட்டை காங்கிரஸ் கட்சியினர் தற்போது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது அவர்கள் எந்த அளவுக்கு அவநம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பதை திட்டவட்டமாக சுட்டிக் காட்டுகிறது. நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது பகிர்ந்த 'மோடி' ட்வீட். அது குறித்து நான் வெட்கப்படவில்லை. நான் அப்போது சார்ந்திருந்த கட்சியின் தலைவரைப் பின்பற்றிய காரணத்தால் அந்தக் கட்சியின் மொழிநடையில் அதை செய்தேன்” என குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE