கர்மவினை அவரை திருப்பித் தாக்கியுள்ளது: ராகுலின் தகுதி நீக்கம் குறித்து அஸ்ஸாம் முதல்வர் கருத்து

By செய்திப்பிரிவு

குவாஹாட்டி: "தகுதி நீக்கத்திற்கு எதிரான அவசரச்சட்ட மசோதாவை ராகுல் காந்தியே கிழித்துப் போட்டார். அவருடைய கர்மவினை அவரைத் திருப்பி தாக்கியுள்ளது. இதில் எங்களுடைய தவறு என்ன இருக்கிறது?" என்று அஸ்ஸாம் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, குவாஹாட்டியில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தகுதி நீக்க விவகாரத்தைப் பொறுத்தவரை, கடந்த 2013-ம் ஆண்டு, நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்படும் உறுப்பினர்கள், உடனடி தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு எதிராக அப்போதைய ஐக்கிய முற்போக்கு அரசு கொண்டு வந்த சட்ட மசோதவை ராகுல் காந்தியே கிழித்துப் போட்டார். அவருடைய கர்மவினை அவரைத் திருப்பித் தாக்கியிருக்கலாம். அதில் என்ன தவறு இருக்கிறது.

நாங்கள் இந்துமத கோட்பாட்டை நம்புகின்றோம். உங்களின் கர்மவினை உங்களைத் திருப்பி தாக்கும் என்பதிலும் நம்பிகை கொண்டிருக்கிறோம். ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. இந்த விவகாரத்தில் அவர் உயர் நீதிமன்றங்களை நாடலாம். எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவராக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு அவருக்கு எந்தவிதமான தடையும் இல்லை. அவர் பேரணிகளையும் அதிகமான இந்திய ஒற்றுமை யாத்திரைகளையும் நடத்தலாம். ஆனால் எந்த ஒரு சமுதாயத்திற்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்கக்கூடாது. அது சரியான செயலில்லை.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக அவதூறாக அவர் பேசியிருக்கிறார். அதன் விளைவாக அருணாச்சலப்பிரதேசம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் அவர் மீது வழக்கு தொடப்பட்டுள்ளது. நீண்ட சட்ட நடைமுறைகளுக்கு பின்னர் நீதிமன்றம் தண்டனை வழங்கியிருக்கிறது அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்ய முடியும். ஆனால் அவர் அந்த பேச்சிற்கு பின்னர் உடனடியாக மன்னிப்பு கோரியிருக்க வேண்டும். சில சமயங்களில் எல்லோருக்கும பேச்சில் தடுமாற்றம் ஏற்படலாம். எங்களுக்கும் அப்படி நடக்கலாம். அந்த சமயத்தில் நாங்கள் உடனடியாக மன்னிப்பு கேட்டுவிடுவோம்.

அவர் ஆணவத்துடன் நடந்து கொண்டார். ஒரு தனிமனிதனின் ஆணவத்திற்கும் ஒரு சமூகத்தின் மதிப்பிற்கும் இடையில் நீதித்துறை ஒரு நடுநிலையை கடைபிடிக்க வேண்டும். நீதிமன்றம் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு ஆதவான முடிவினை எடுத்துள்ளது.

அந்த மன்னிப்பும் மோடிக்கானது இல்லை. அது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கானது. நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் ராகுல் மன்னிப்புக் கேட்காமல், சண்டைக்கோழியைப் போல நடந்து கொள்கிறார். அவரது இந்தக் கருத்துக்களால் காங்கிரஸில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்" இவ்வாறு அஸ்ஸாம் முதல்வர் பேசினார்.

முன்னதாக நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று விமர்சித்திருந்தார்.

இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி, ராகுல் காந்தி தகுதி நீ்க்கம் செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE