2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் எம்.பி. பதவியிலிருந்து ராகுல் தகுதி நீக்கம் | முழு விவரம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குற்றவியல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டெல்லியில் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?’’ என்று விமர்சித்தார்.

இது தொடர்பாக குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி,சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.

இந்தியக் குற்றவியல் சட்டம் 499,500 ஆகிய பிரிவுகளின்படி ராகுல்காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டது.

13 கோடி பேர் அவமதிப்பு: சூரத் நீதிமன்றம் வழங்கிய 168 பக்கத் தீர்ப்பில் கூறியிருப்பதாவது: அரசியல் ஆதாயத்துக்காக நாட்டின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பப் பெயரை ராகுல் காந்தி குறிப்பிட்டிருக்கிறார். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள, மோடி குடும்பப் பெயர் கொண்ட 13 கோடி மக்களை அவர் அவமதித்து உள்ளார்.

அவர் பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பான மின்னணு ஆதாரங்கள் தெளிவாக உள்ளன. அவரது பேச்சை நேரில் கேட்ட சாட்சிகளும், ராகுல் காந்திக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். மோடி என்ற பெயரை அவர் வேண்டுமென்றே குறிப்பிட்டு, அவமரியாதை செய்துள்ளார்.

மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி, எம்.பி. என்ற வகையில் பொதுக்கூட்டத்தில் பேசுவது, மக்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு எம்.பி. தவறு இழைக்கிறார் என்பது, மிகப்பெரிய தவறாகும். அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கினால், சமுதாயத்துக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே, அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் வழக்கில்...: குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., எம்எல்ஏ-க்களை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.

இதன் அடிப்படையில், குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று முன்தினம் மதியம் 12.30 மணிக்குத் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் நகல் 26 மணி நேரத்துக்குப் பிறகு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் நேற்று கிடைத்தது. அவரது அறிவுரையின்படி, ராகுல் காந்தியின்எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

இது தொடர்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘‘சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்படுகிறார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையின் நகல், தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

மக்களவை கூட்டத் தொடரில் நேற்றுகாலை ராகுல் காந்தி பங்கேற்ற நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ட்விட்டரில் ராகுல் வெளியிட்ட பதிவில், “இந்தியாவுக்காக குரல் எழுப்பி, போராடி வருகிறேன். அதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராக உள்ளேன்" என்று தெரிவித்துள்தார்.

டெல்லி விஜய் சவுக் பகுதியில் காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் இணைந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மேலும், டெல்லியில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்