பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கு: ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை | முழு விவரம்

By செய்திப்பிரிவு

சூரத்: பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று விமர்சித்தார்.

இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்திய குற்றவியல் சட்டம் 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் ராகுல் காந்தி மீது விசாரணை நடைபெற்றது. 2021 ஜூன் மாதம் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகி, விளக்கம் அளித்தார்.

சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் கடந்த 17-ம் தேதி இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மாஜிஸ்திரேட் எச்.எச். வர்மா அறிவித்திருந்தார்.

இதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்டோர் சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். அனைத்துத் தரப்பினரும் ஆஜரான நிலையில் தீர்ப்பை வாசித்த மாஜிஸ்திரேட் வர்மா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.

தொடர்ந்து மனுதாரர் புர்னேஷ் மோடி தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, “சட்டங்களை இயற்றும் மக்களவையின் எம்.பி.யாக ராகுல் காந்தி உள்ளார். அவருக்கு சட்ட விதிகள் அனைத்தும் தெரியும். அவரே விதிகளை மீறியுள்ளார். அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இந்த தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்" என்றார்.

ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடும்போது, “வழக்கில் மன்னிப்பு கோர விரும்பவில்லை. ராகுல் காந்தி ஊழலுக்கு எதிராகவே பேசினார். அவர் தனது கடமையை மட்டுமே செய்தார்” என்றனர்.

ராகுலுக்கு 30 நாட்கள் ஜாமீன்: இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் வர்மா, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்தார். இதையடுத்து, ராகுல் காந்தி தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் வர்மா, அவருக்கு 30 நாள் ஜாமீன் வழங்கி, அதுவரை தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டார்.

ராகுல் காந்தியின் வழக்கறிஞர் பாபு கூறும்போது, “இந்த தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். நீதித் துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “எனது மதம் உண்மை, அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. உண்மையே எனது கடவுள். அகிம்சை அதை அடையும் வழி. இது காந்தியடிகளின் பொன் மொழி” என்று தெரிவித்துள்ளார்.

எம்.பி. பதவி பறிபோகுமா?: உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிபோகும் அபாயம் உள்ளது.

சூரத் நீதிமன்றம் அவருக்கு விதித்த தண்டனையை ஒரு மாதத்துக்கு மட்டும் நிறுத்தி வைத்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவரது தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்தே, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தப்புமா, பறிபோகுமா என்பது தெரியவரும்.

இது தொடர்பாக பாஜகவினர் கூறும்போது, "வழக்கறிஞர் லில்லி தாமஸ் தொடர்ந்த வழக்கில், 2013 ஜூலை 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியது. இதன்படி, குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., எம்எல்ஏக்களை தீர்ப்பு வெளியான நாளில் இருந்தே பதவி நீக்கம் செய்யலாம்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஆசம் கான் உள்ளிட்டோர் தீர்ப்பு வெளியான நாளே பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அந்த வகையில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை உடனடியாகப் பறிக்க வேண்டும்" என்றனர்.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி கூறும்போது, “சூரத் நீதிமன்றத் தீர்ப்பின்படி ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்யக் கோரி மக்களவைத் தலைவரிடம் மனு அளிக்கலாம். அவர் தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்வார். இதையடுத்து, ராகுல் காந்தியின் வயநாடு மக்களவைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்படும். ராகுல் மீதான தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டால் மட்டுமே, அவரது எம்.பி. பதவி தப்பும்" என்றார்.

இந்த விவகாரம் குறித்து சட்ட நிபுணர்கள் கூறும்போது, "ராகுல் வழக்கில், அவர் உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்ய முடியும். ஒருவேளை உச்ச நீதிமன்றமும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால், கண்டிப்பாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். அவர் விடுதலையான நாள் முதல் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்