“பஞ்சாப் போலீஸார் கூறும் தகவல்கள் ஆச்சரியம் அளிக்கிறது” - அம்ரித்பால் சிங்  தப்பிச் சென்றதில் மாநில காங்கிரஸ் சந்தேகம்

By செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்சாபில் ‘அனந்த்பூர் கல்சா ஃபவுஜ்’ என்ற பெயரில், தீவிரவாத குழுவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸார் கடந்த 5 நாட்களாக தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர் தப்பிச் சென்ற பைக் தாராபூர் என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸார் தேடுவதை அறிந்த அம்ரித்பால் சிங் கடந்த சனிக் கிழமை மாலை குருத்வாரா ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கிருந்து அவர் பைக் ஒன்றில் மாறு வேடத்தில் தப்பிச் சென்றுள்ளார். அவரை விரட்டிச் சென்ற போலீஸார் நானாகல் அம்பியான என்ற இடத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் தாராபூர் என்ற கிராமத்தில் அம்ரித்பால் சிங் சென்ற பைக் நிறுத்தப் பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் பஞ்சாப் டிஜிபி.,க்கு, மாநில காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் ராஜா வாரிங் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “காவல் துறை நடவடிக்கைகள் குறித்து தகவல் கிடைக்காமல், அம்ரித்பால் சிங்கால் எப்படி வாகனங்களை மாற்றியும், மாறு வேடத்திலும் தப்பிச் சென்றிருக்க முடியும்? போலீஸார் தெரிவிக்கும் தகவல்களை கேட்டால், அவர் தப்பிச் செல்ல முன்கூட்டியே திட்டமிட்டது போலவும், கார்கள், பைக்குகள், உடைகள் ஆகிய வற்றை தயார் நிலையில் வைத் திருந்தது போலவும் உள்ளது.

உங்கள் தலைமையின் கீழ் பஞ்சாப் காவல் துறை சிறப்பாக செயல்படுவதை நான் எப்போதும் பாராட்டுவேன். ஆனால் தற்போது பஞ்சாப் போலீசாரின் தோல்வி எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. இது உளவு அமைப்புகளின் முழுத் தோல்வியை காட்டுகிறது அல்லது எப்போதும் அனைத்து விஷயங்களிலும் அரசியல் ஆதாயம் தேடும் மத்திய உள்துறை அமைச்சர் - மாநில முதல்வரின் ரகசிய உத்தரவின்படி இந்த சம்பவங்கள் நடந்திருக்க வேண்டும்.

ஒருவரை பிடிப்பதற்காக போலீஸார் விரட்டிச் செல்லும்போது, அப்பகுதி முழுவதும் ஏன் சுற்றிவளைக்கப் படவில்லை. பஞ்சாப் போலீஸாரின் தோல்வியை மறைக்க ஏராளமான இளைஞர்களை போலீஸார் பிடித்து அவர்களை அம்ரித்பால் சிங்குடன் தொடர்புபடுத்துகின்றனர். அந்த இளைஞர்கள் மீது தேசவிரோதிகள் என முத்திரை குத்துவது அவர்களை மேலும் சமூகத்திலிருந்து விலகிச் செல்ல வைக்கும்.” இவ்வாறு அமரிந்தர் ராஜா குறிப்பிட்டுள்ளார்.

போதைக்கு அடிமையானவர்களை தீவிரவாதிகளாக மாற்ற முயற்சி

அம்ரித்பால் சிங் தலைவராக உள்ள ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பின் சார்பில் போதை மறுவாழ்வு மையங்கள் சட்டவிரோதமாக நடத்தப்படுவதை உளவுத் துறை கண்டுபிடித்துள்ளது.
மறுவாழ்வு மையத்தில் மருத்துவர்கள் யாரும் இல்லை. மாறாக போதைக்கு அடிமையானவர்களை தீவிரவாதிகளாக மாற்றும் முயற்சி நடந்துள்ளது. போராட்டங்களில் வன்முறையில் ஈடுபடவும், போதை
மறுவாழ்வு மையங்களில் உள்ளவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். போதைப் பழக்கத்திலிருந்து இவர்களைமீட்பதற்கு பதிலாக, இவர்கள் எப்போதும் போதைப் பொருட்களை சார்ந்திருக்கும் வகையில், தரக் குறைவான போதைப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது.

போதைப் பொருள் கொள்முதலிலும் அம்ரித்பால் சிங் ஈடுபட்டுள்ளார். அம்ரித்பால் சிங்குக்கு ஜஸ்வந்த்சிங் ரோட் என்பவருடன் தொடர்பு உள்ளது. இவரது சகோதரர் லக்பிர் சிங் ரோட், பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருட்களை இந்தியாவுக்கு கடத்தி வந்துள்ளார். இதனால் போதைப் பொருள் வர்த்தகத்திலும் அம்ரித்பால் சிங் ஈடுபட்டிருக்கலாம் என உளவுத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அம்ரித்பால் சிங்கை லண்டனில் இருந்து வழிநடத்தும் அவதார் சிங் கண்டாவுக்கு பரம்ஜித் சிங் பம்மா என்ற தீவிரவாதியுடன் தொடர்பு உள்ளது. இவர் இந்தியாவுக்கு போதைப் பொருட்களை அனுப்பி வருவதும் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள போதைப் பொருள் டீலர்கள் பில்லா, பிலால் மற்றும் ராணா போன்றோருடன் அம்ரித்பால் சிங்குக்கு தொடர்பு உள்ளது கண்டறிப்பட்டுள்ளது.

போதை மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்களை வைத்துதான் ‘அனந்த்பூர் கல்சா ஃபவுஜ் (ஏகேஎப்) என்ற தீவிரவாத குழுவை அம்ரித்பால் சிங் ஏற்படுத்தியுள்ளார். இவர்கள்தான் அம்ரித்பால் சிங்கின் பாதுகாவலர்களாக இருந்துள்ளனர். இந்த ஏகேஎப் குழுவில் உள்ள அனைவருமே குற்றவாளிகள். அமிர்தசரஸில் உள்ள அம்ரித்பாலின் வீடு, அவரது குண்டு துளைக்காத உடை மற்றும் அவரது கூட்டாளிகளின் ஆயுதங்கள் ஆகியவற்றில் ஏகேஎப் என எழுதப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் அனைத்தும் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ மூலம் பெறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE