மத்திய அரசின் பாகுபாட்டைக் கண்டித்து 2 நாட்கள் போராட்டம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்கு எதிரான மத்திய அரசின் பாகுபாட்டைக் கண்டித்து தலைநகர் கொல்கத்தாவில் வரும் 29-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை போராட்டம் நடத்த இருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ''மேற்கு வங்கத்திற்கு எதிராக மத்திய அரசு பாகுபாட்டுடன் நடந்து கொள்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது. இதேபோல், வீடு கட்டும் திட்டம், சாலைத் திட்டம் போன்ற திட்டங்களுக்கும் மேற்கு வங்கத்திற்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை.

மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு திட்டத்திற்கும் நிதி பெறாத ஒரே மாநிலம் மேற்கு வங்கம்தான். மேற்கு வங்கத்திற்கு நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விடுவிக்க மறுக்கிறது. மத்திய அரசின் சமீபத்திய பட்ஜெட்டிலும் மேற்கு வங்கத்திற்கு எதுவும் இல்லை. எனவே, மத்திய அரசின் பாகுபாட்டைக் கண்டித்து நான் போராட இருக்கிறேன். கொல்கத்தாவில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக இந்த போராட்டம் நடைபெறும். வரும் 29-ம் தேதி தொடங்கும் போராட்டம் 30-ம் தேதி மாலை நிறைவு பெறும்'' என தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக ஒடிசாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு முதல்வர் நவீன் பட்நாயக்கைச் சந்தித்து அவர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE