பஞ்சாபில் பிரிவினைவாத தலைவர் தப்பியோட்டம்: 100 பேர் கைது; பதற்றத்தால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு

By செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்சாபில் பிரிவினைவாத தலைவர்அம்ரித்பால் சிங் (30) தப்பியோடிவிட்டார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த பஞ்சாபி நடிகர் தீப் சித்து கடந்த 2021-ம்ஆண்டு செப்டம்பரில் ‘வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பை தொடங்கினார். டெல்லி செங்கோட்டை வன்முறை வழக்கில்அவர் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டார். எதிர்பாராதவிதமாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஹரியாணாவில் ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து ‘வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் பதவியேற்றார். அவர் பொறுப்பேற்றது முதல் காலிஸ்தான் பிரிவினைவாத கொள்கைகள் தலைதூக்கின. கடந்த மாதம் அவரது ஆதரவாளரை அமிர்தசரஸ் புறநகர் போலீஸார் கைது செய்தனர். அப்போது கத்தி, துப்பாக்கி ஏந்திய ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை அம்ரித்பால் சிங் முற்றுகையிட்டார். இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இதன்படி பஞ்சாப் மாநிலத்துக்கு மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 10 கம்பெனிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், அவரை போலீஸார் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் போலீஸ் வளையத்தில் இருந்து அவர் தப்பியோடிவிட்டார்.

அவரது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் அல்லது ஹரியாணாவில் அம்ரித்பால் சிங் பதுங்கியிருக்கக்கூடும் என்றுகூறப்படுகிறது. இரு மாநிலங்களிலும் பஞ்சாப் போலீஸார் தீவிரதேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அசாம் மாநிலத்துக்கும் தனிப்படை அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமிர்தசரஸ் போலீஸார் கூறியதாவது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் அம்ரித்சிங் பாலுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்களிடம் இருந்து உரிமம் பெறாத 8 துப்பாக்கிகள், ஏராளமான துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அனந்தபூர் கல்சா படை (ஏகேஎப்) என்ற பெயரில் புதிதாகபிரிவினைவாத படையை தொடங்கஅம்ரித்பால் சதித் தீட்டம் தீட்டியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவர் தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்படும்.

இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பஞ்சாபின் அமிர்தசரஸில் ஜி-20 அமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நகரத்துக்கு அருகே அம்ரித்சிங் பாலின் பூர்விக கிராமம் அமைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப்முழுவதும் 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டு உள்ளது. இன்று மதியம் 12 மணி வரை இணையசேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. எஸ்எம்எஸ் சேவையும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

அம்ரித்பால் சிங்கின் தாய் பல்வீந்தர் கவுர் வெளியிட்டுள்ள வீடியோவில், “எனது மகனை போலீஸார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்துள்ளனர். போலி என்கவுன்ட்டரில் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்.

அம்ரித்பால் சிங் யார்?

கடந்த 1993-ம் ஆண்டு பஞ்சாபின் அமிர்தசரஸ் ஜல்லபூர் கெராகிராமத்தில் அம்ரித்பால் சிங் பிறந்தார். 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டில் துபாய்க்கு சென்ற அவர் அங்கு உறவினர் நடத்தும் போக்குவரத்து சேவை நிறுவனத்தில் பணியாற்றினார்.

அண்மையில் பஞ்சாப் திரும்பிய அவர், கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி ‘வாரிஸ் பஞ்சாப் டி'அமைப்பின் தலைவராக பதவியேற்றார். சில மாதங்களுக்கு முன்னர்தான் அம்ரித்பால் சிங் குறித்து போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்