புதுடெல்லி: ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்றம் நேற்று தொடர்ந்து 5-வது நாளாக முடங்கியது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என லண்டனில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் கட்சியினர் பதில் கோஷமிட்டனர். இதே கோஷம் நாடாளுமன்றத்தில் 5-வது நாளாக நேற்றும் எதிரொலித்தது.
மக்களவை நேற்று காலை தொடங்கியதும், காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின்மையப் பகுதிக்கு சென்று அதானி குழுமம் முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என கோஷமிட்டனர். ராகுல் காந்தியை அவையில் பேச அனுமதிக்க வேண்டும் எனவும் கூறினர்.
பதிலுக்கு, ஆளும் கட்சி உறுப்பினர்கள் இந்தியாவை அவமானப்படுத்தியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷமிட்டனர். இந்த அமளி 20 நிமிடங்கள் தொடர்ந்தது. அவையை சுமுகமாக நடத்த அனுமதிக்க வேண்டும் என எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். ‘‘அமளியில் ஈடுபடுவதற்காக, மக்கள் உங்களை இங்கு அனுப்பவில்லை. அனைவரும் பேச வாய்ப்பு அளிக்கிறேன். அவையை சுமுகமாக நடத்த உதவுங்கள்’’ என்றார்.
அவரது வேண்டுகோளை எம்.பி.க்கள் கண்டுகொள்ளாததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாகவும், மக்களவை மீண்டும் நாளை மறுநாள் கூடும் எனவும் அறிவித்தார். அப்போது அவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இதர அமைச்சர்கள் இருந்தனர்.
இதேபோல, மாநிலங்களவை நேற்று காலை கூடியபோது, அதானி குழும முறைகேடு குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர். இதை மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் நிராகரித்தார்.
இதையடுத்து, காங்கிரஸ், ஆம் ஆத்மிஎம்.பி.க்கள் அவையின் மையப் பகுதிக்குசென்று, நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். அவர்களுக்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ், திமுக எம்.பி.க்களும் இருக்கையை விட்டு எழுந்து நின்று குரல் கொடுத்தனர். பதிலுக்கு, ராகுல்மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இந்த அமளியால் மாநிலங்களவையும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பிரதமருக்கு எதிராக நோட்டீஸ்: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் கோடி கடந்த மாதம்9-ம் தேதி மாநிலங்களவையில் பேசினார். அப்போது ‘‘நாட்டில் 600-க்கும் மேற்பட்ட அரசு திட்டங்களுக்கு நேரு - காந்திகுடும்பத்தினரின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் நேரு குடும்பத்தினர் யாரும் தங்களது பெயர்களில் நேருவை ஏன் சேர்க்கவில்லை என்பதுதான் புரியவில்லை. இதிலென்ன வெட்கம் அவர்களுக்கு?’’ என்றார்.
இதனால் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி.யுமான வேணுகோபால், அவைத் தலைவரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார். ‘காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்குஎதிராக, பிரதமர் மோடி தரக்குறைவான கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்த கருத்து மக்களவை உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தியை கேலி செய்வது போன்றும், புண்படுத்துவது போன்றும், அவமதிக்கும் வகையிலும் உள்ளது. அதனால், மாநிலங்களவை விதி எண் 188-ன் கீழ் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கிறேன். அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago