உ.பி.யை தொடர்ந்து குஜராத்தில் ‘அகமதாபாத் தமிழ்ச் சங்கமம்’ - மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் நாளை அறிவிக்கிறார்?

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: கடந்த வருடம் உத்தர பிரதேசத்தில் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற்றது. அப்போது இதுபோன்ற இரண்டு மாநில பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு மற்றும் வர்த்தக தொடர்புகளை முன்னிறுத்தும் நிகழ்ச்சிகள் மேலும் பல மாநிலங்களில் தொடரும் என்ற பேச்சு எழுந்தது.

இந்நிலையில், உ.பி.யை தொடர்ந்து குஜராத் – தமிழகம் இடையிலான பழம்பெரும் உறவை போற்றும் வகையில் ‘அகமதாபாத் தமிழ்ச் சங்கமம்’ நடைபெற உள்ளது. உ.பி.யில் ஆன்மிகத்தை முன்னிறுத்தியது போல் குஜராத்தில், உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக, அகமதாபாத் தமிழ்ச் சங்கமத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தலைமையேற்று நடத்துகிறது. இதனுடன் மத்திய அரசின் கல்வி, ரயில்வே, சுற்றுலா, வர்த்தகம், செய்தி ஒலிபரப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைகின்றன. இது தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வட்டாரம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: கடந்த மாதம் சென்னையிலிருந்து தமிழ்ப் பத்திரிகையாளர்கள் கொண்ட குழு, குஜராத் அரசின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தது. மத்திய செய்தி ஒலிபரப்புத் துறையின் சென்னை கிளை நடத்திய இந்த ஏற்பாட்டின் மூலமான செய்திகளின் பலனும் குஜராத் அரசை மகிழ்வித்துள்ளது. இதன் தாக்கமாகவும் அடுத்த தமிழ்ச் சங்கமத்தை குஜராத்தில் நடத்த திடீரென முடிவானது. மார்ச் 19-ல் சங்கமம் தொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் சென்னையில் வெளியிடுவார் எனத் தெரிகிறது. அப்போது இதற்கான இணையதளமும் தொடங்கப்படுகிறது. அகமதாபாத்திலுள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சங்கமத்தை நடத்த ஒரு புதிய குழு அமர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் நடைபெறுவதால், இந்த சங்கமத்தில் பாஜகவினர் பெரும் பங்கு வகிக்க உள்ளனர். இதில், தமிழக பாஜகவின் ஐ.டி. பிரிவுக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இச்சங்கமத்தின் மூலம் மறைமுகமாக அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியும் பாஜகவுக்கு உள்ளது.

இதன்படி சுமார் 3 நூற்றாண்டுகளுக்கு முன் குஜராத்திலிருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்த சவுராஷ்டிரா சமூகத்தினர் மீது பாஜகவின் பார்வை உள்ளது. தற்போது தமிழர்களாகவே மாறிவிட்ட சவுராஷ்டிராவினர் தமிழகத்தில் சுமார் 30 லட்சம் பேர் இருப்பதாக கருதப்படுகிறது. குஜராத்திகளும் தமிழகத்தில் பல லட்சம் பேர் உள்ளனர். இதுபோல் தமிழர்களும் குஜராத்தில் ஏராளமானோர் உள்ளனர். இவர்களையும் வரும் தேர்தல்களில் தமக்கு ஆதரவாக வளைப்பதில் பாஜக தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இதற்காக அகமதாபாத் சங்கமம் குறித்து மத்திய அமைச்சர்கள் தலைமையில் தமிழக மாவட்டங்களில் கூட்டங்களும் நடத்தப்பட உள்ளது.

காசி தமிழ்ச் சங்கமத்துக்கு மத்திய கல்வி அமைச்சகம் விடுத்த அழைப்பை தமிழக அரசு நிராகரித்தது. இருப்பினும் இரண்டாவது சங்கமம் நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் அழைப்பு கடிதம் அனுப்பப்பட உள்ளது. இதை தமிழக அரசு ஏற்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்