எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அமளியால் நாடாளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அமளியால் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 4-வது நாளாக நேற்றும் முடங்கின.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல் காந்தி அவையில் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஆளும் பாஜகவும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றன.

இதனால், கடந்த 13, 14, 15-ம் தேதிகளில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் முடங்கின. மக்களவையில் நேற்று காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர், அதானி குழும விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி நோட்டீஸ் வழங்கினார். மற்றொரு காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார்.

நேற்று காலை மக்களவை தொடங்கியது முதலே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியபோதும், இதேநிலை நீடித்தது. இதன் காரணமாக நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது, ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதேநேரத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அதானி விவகாரத்தை எழுப்பினர்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள், அவையின் மையப் பகுதியில் கூடி கோஷமிட்டனர். இதனால், அவை தொடங்கிய 2 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியபோதும், இதேநிலை நீடித்தது. இதன் காரணமாக மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.

இந்தியாவை அவமதிக்கவில்லை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வில் முதல் 3 நாட்கள் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்த அவர் நேற்று மக்களவைக்கு வந்தார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை. அதானி குழுமத்துக்காக விதிகள் வளைக்கப்படுகின்றன. மும்பை உட்பட பல்வேறு விமான நிலையங்களின் ஒப்பந்தங்கள் அதானி குழுமத்துக்கு வழங்கப்படுகின்றன. இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியாவிலும் அந்த குழுமத்துக்கே ஒப்பந்தங்கள் கிடைக்கின்றன. அதானி குழுமத்தில் எஸ்பிஐ வங்கி பெருமளவில் முதலீடு செய்திருக்கிறது. இது எப்படி நடைபெறுகிறது?

அதானியின் போலி நிறுவனங்களில் யாருடைய பணம் இருக்கிறது? இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

ராகுலுக்கு நோட்டீஸ்

பாரத ஒற்றுமை யாத்திரையின்போது ஸ்ரீநகரில் பேசிய ராகுல் காந்தி, “பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் என்னிடம் முறையிட்டனர்" என்றார்.

இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு டெல்லி போலீஸ் சார்பில் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

37 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்