தேசிய கலாச்சார பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - மத்திய அரசுக்கு நாடாளுமன்றக் குழு பரிந்துரை

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தேசிய கலாச்சார பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நாடாளுமன்ற வர்த்தகக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதன் உறுப்புக் கல்லூரிகளை அனைத்து மாநிலங்களிலும் அமைத்து உயர்நிலை ஆய்வுகள் செய்யவும் யோசனை கூறியுள்ளது.

நம் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தனிப்பட்ட கலாச்சாரம் காணப்படுகிறது. நவீன கால மாற்றத்தால் இது மறைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை காத்து, இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு புதிய யோசனை மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. வி.விஜய்சாய் ரெட்டி தலைமையிலான நாடாளுமன்ற வர்த்தக குழு அளித்துள்ள பரிந்துரையில், “நாட்டில் தேசிய கலாச்சார பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் இந்திய மொழிகளின் வரலாறு உள்ளிட்டவை குறித்து இப்பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொள்ளலாம்.

குஜராத்தின் கவடியாவில் ஒற்றுமையின் சின்னமாக அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபபாய் படேலின் சிலையை முன்னுதாரணமாகக் கொண்டு நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் வரலாற்றுப் புகழ் பெற்றவர்களின் சிலைகளை அமைக்கலாம். மத்திய சுற்றுலா அமைச்சகத்துடனும் இணைந்து இதனை செயல்படுத்தலாம்” என கூறப்பட்டுள்ளது.

இந்த யோசனையை கவனத்தில் எடுத்துள்ள மத்திய கலாச்சார அமைச்சகம், அனைத்து மாநிலங்களிலும் முக்கியத்துவம் பெற்ற சிலைகள் அல்லது சின்னங்கள் அமைக்கத் திட்டமிடுகிறது. இப்பகுதியை பொதுமக்கள் வந்துசெல்லும் சுற்றுலாத் தலமாக அமைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

தேசிய கலாச்சார பல்கலைக்கழகத்தை டெல்லியில் அமைத்து அதன் உறுப்புக் கல்லூரிகளை அனைத்து மாநிலங்களிலும் அமைக்க வேண்டும் எனவும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.

இந்தப் பரிந்துரையில், “மத்திய பல்கலைக்கழகத்தை, மத்திய உயர்கல்வி நிறுவனமாக அமைக்கலாம். இதன்மூலம், வெளிநாடுகளின் கலாச்சாரம் மற்றும் மொழிகள் மீதான ஆய்வுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இடலாம். இதுபோன்ற ஒப்பந்தங்களை புகழ்பெற்ற வெளிநாட்டு அருங்காட்சியகங்களுடனும் மேற்கொண்டு, பல்வேறு பிரிவுகளில் உயர் ஆய்வுகள் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன” என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2014-ல் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அரசு ஆட்சியில் அமர்ந்தது முதல், இந்திய கலாச்சாரத்தின் புகழை சர்வதேச அளவில் பரப்பும் முயற்சி நடைபெற்று வருகிறது.

இதற்காக, இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் மத்திய கலாச்சாரத் துறைக்கு பட்ஜெட் தொகை ஒதுக்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் இந்திய கலாச்சாரத்தை பரப்ப கடந்த 5 ஆண்டுகளில் இந்த அமைச்சகம் ரூ.85.69 கோடி தொகையை செலவிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வகையில், தேசிய கலாச்சார பல்கலைக்கழகம் அமைக்க அடுத்த வருட பட்ஜெட்டில் மேலும் பல கோடிகளை மத்திய அரசு ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE