இந்திய ஆட்சியாளர்களின் சிக்கன சிந்தனை!

By சேகர் குப்தா

ஹோமியோபதி என்ற சிகிச்சை முறை ஜெர்மனியில் 1796-ல் சாமுவேல் ஹானிமன் என்பவரால் உருவாக்கப்பட்டது. வளர்ந்த நாடுகளில் சில அதைப் புகழ்ந்துள்ளன, கேள்வி கேட்டுள்ளன, ஆராய்ச்சி செய்துள்ளன, நிராகரித்துள்ளன. அதற்கு அறிவியல் அடிப்படை இல்லை என்று கூறி ‘போலி அறிவியல்’ என்று கூட நிராகரித்துவிட்டனர். ஹோமியோபதியால் பலன் கிடைத்ததாக நோயாளி கருதுவதற்கு உளவியலே காரணம்; நன்றாக இருக்கிறோம் என்று நோயாளி கருதினால் வியாதி மறைகிறது அல்லது குறைகிறது. மேலை நாடுகள் பல நிராகரித்தாலும் உலகில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டாலர் ஹோமியோபதி மருந்துகளுக்காகச் செலவிடப்படுகிறது.

ஒரேயொரு நாட்டில்தான் அது இன்னமும் முக்கியமான இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது. அதுதான் இந்தியா. ஹோமியோபதி பிறந்த ஜெர்மனியில் அது கிட்டத்தட்ட மறைந்தேவிட்டது. ஆனால் இந்தியாவில் செழிக்கிறது, மத்திய அரசே கோடிக்கணக்கில் பணம் ஒதுக்குகிறது. ‘ஆயுஷ்’ (AYUSH) என்ற ஆங்கில வார்த்தையில் ஆயுர்வேதம், யோகாசனம்-இயற்கை சிகிச்சை முறை, யுனானி, சித்தா, ஹோமியோபதி அடக்கம்.

ஹோமியோபதி மாத்திரைகள் பல்லி மிட்டாயைப் போல இனிப்பாக, லேசான சாராய நெடியுடன் இருக்கும். சிலர் மாதக்கணக்காக இதைச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்; குணமாகிவிட்டதாகக்கூட நினைப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேல், இந்த மருந்துகளால் பக்க விளைவுகள் ஏதும் கிடையாது. ஆங்கில மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு அஞ்சுகிறோம்; அறுவை சிகிச்சை என்றால் அலறிவிடுகிறோம். அதனால்தான் ஹோமியோபதி முறையை பூஜிக்கிறோம். இதே மனப்பான்மைதான் அடித்தளக் கட்டமைப்பு திட்டங்களிலும் நமக்கு இருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு என்றால் மலைத்துப்போய் வேண்டாம் என்கிறோம்.

அகமதாபாத் - மும்பை புல்லட் ரயில் திட்டத்துக்காக பிரதம மந்திரிகள் நரேந்திர மோடியும் ஜப்பானின் ஷின்சோ அபேயும் கடந்த வாரம் கலந்துகொண்ட நிகழ்ச்சி தொடர்பாகவும் அதே ரீதியிலான கண்டனங்கள்தான் பாய்கின்றன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷேக் மனு சிங்வி கண்டனம் தெரிவித்திருந்தார். “முகலாயர் ஆட்சியில் ஷாஜஹான் தாஜ்மகாலைக் கட்டியதால்தான் இந்தியப் பொருளாதாரம் சரிந்து வறுமையும் பட்டினியும் தாண்டவமாடியது. இந்த புல்லட் ரயில் திட்டம் குறித்து நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார் சிங்வி.

“இந்தியாவுக்கு இது தேவையா, இதற்கான செலவை நாம் தாங்குவோமா, இதனால் என்ன பலன்? இது தொழிலதிபர்களுக்கு மட்டும்தான் பயன்படும்” என்று வழக்கம்போல விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.

எந்த புதிய – பெரிய திட்டம் பற்றிப் பேசினாலும் இதுதான் பெரும்பாலானவர்களின் விமர்சனம். மகாராஷ்டிர போக்குவரத்து அமைச்சராக 38 வயது நிதின் கட்கரி (1995-99) பதவியேற்றபோது மும்பை-புனே எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையைத் திட்டமிட்டார். “இது சுற்றுச்சூழலை நாசமாக்கிவிடும், தொழில்நுட்பரீதியாக சாத்தியமே இல்லை, பொருளாதார ரீதியாக லாபம் தராது” என்று எதிர்த்தார்கள். இப்போது அந்த சாலையில்லாமல் மகாராஷ்டிராவை கற்பனை செய்யவே முடியாது. ‘கட்டு-இயக்கு-ஒப்படை’ என்ற அடிப்படையில் இது நிறைவேற்றப்பட்டது. இதைப் பார்த்த பிறகு தேசம் முழுவதும் இதே போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இப்போது புகாரெல்லாம் ஒப்பந்ததாரர் கோடிக்கணக்கில் லாபம் பார்த்துவிட்டார் என்பதுதான்! உண்மையில் ஆதாயம் சமுதாயத்துக்குத்தான் கிடைத்தது. இனி வளர முடியாது என்று திணறிக் கொண்டிருந்த புனே, தகவல் தொழில்நுட்ப நகரமாக விரிவடைந்தது.

எந்த ஒரு பெரிய திட்டத்தையும் தொடக்கத்திலேயே ‘இது தேறாது, முடியாது’ என்று கருத்து தெரிவித்து கோப்பு நிலையிலேயே சமாதி கட்டும் வேலையை மத்திய திட்டக்குழு செய்துகொண்டிருந்தது. மாருதி கார் திட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட்டபோது, ‘இந்தியா போன்ற ஏழை நாட்டில் காரெல்லாம் நூற்றுக்கணக்கில் விற்காது, இந்த திட்டம் வேண்டாம்’ என்றது. அப்போது அம்பாசிடர், பியட் கார்கள் ஆண்டு முழுவதற்கும் நாடு முழுவதிலும் 50,000-க்கும் குறைவாகத்தான் விற்கப்பட்டன. திட்டக்குழுவின் ஆட்சேபம் நிராகரிக்கப்பட்டு மாருதிக்கு பிறகு அனுமதி தரப்பட்டதால் மோட்டார் வாகனத் தயாரிப்பில் உலக அளவில் இந்தியா இப்போது முன்னிலை வகிக்கிறது. 2016-17 நிதியாண்டில் 30 லட்சம் வாகனங்கள் உள்நாட்டில் விற்கப்பட்டன, 7.5 லட்சம் ஏற்றுமதி செய்யப்பட்டன!

பெருநகர விமான நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான விவாதங்களை மறுவாசிப்பு செய்யுங்கள். அரசின் சொத்துகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதாக இடதுசாரிகள் குற்றஞ்சாட்டினர். தேவைக்கும் அதிகமாக விமான நிலையங்கள் விரிவாக்கப்படுகின்றன, இந்தச் செலவைத் திரும்ப எடுக்க முடியாது, இது கட்டுப்படியாகாது என்றெல்லாம் வாதிட்டனர். இப்படி விரிவாக்கப்பட்ட மும்பை, டெல்லி, பெங்களூரு விமான நிலையங்களில் கூட்டம் அதிகமாகிவிட்டது .மேலும் விரிவு செய்தாக வேண்டும் என்று இப்போது கேட்கத் தொடங்கிவிட்டனர்! விமான நிலைய விரிவாக்கத்தை மேற்கொண்டிருக்காவிட்டால் விமானப் போக்குவரத்து இப்படி பெருகியிருக்காது. டெல்லி விமான நிலையத்துக்கு அருகில் கட்டப்பட்டுள்ள ஏரோசிட்டியும் இப்போது நிரம்பி வழிகிறது.

டெல்லி-ராஜஸ்தான், டெல்லி-அமிர்தசரஸ் தேசிய நெடுஞ்சாலையை முதலில் 4 வழிப்பாதையாகக் கட்டி முடித்து, முடித்த கையோடு ஆறு வழிப்பாதையாக விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளனர். டெல்லி - குருகிராம் 8 வழிப்பாதை கட்டி முடிப்பதற்குள்ளாகவே நெரிசலில் சிக்கியது. அதை 12 வழிப்பாதையாக்க வேண்டும் என்று கூறியபோது அரசின் திட்ட பிதாமகன்கள், தேவையில்லை என்று நிராகரித்தனர். முதலிலேயே திட்டமிட்டு பெரிதாகக் கட்டியிருந்தால் செலவு, நேரம், உழைப்பு அனைத்துமே மிச்சம்.

அரசின் திட்டமிடலில் ஹோமியோபதியைப் போல எளிதாகச் செய்ய நினைப்பது கெடுதலாகத்தான் முடிகிறது. அகமதாபாத்-டெல்லி புல்லட் ரயில் திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் திட்டத்தை அமல்படுத்தப்போவதும் அதற்கான பணத்தைச் செலவிடப் போவதும் ஜப்பானியர்கள்தான். மோடி அரசு மீது உங்களுக்குப் பல விமர்சனங்கள் இருக்கலாம், உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல் என்ற அதன் முடிவில் குறை காண முடியாது.

தமிழில்: ஜூரி.

சேகர் குப்தா, ‘தி பிரிண்ட்’ தலைவர், முதன்மை ஆசிரியர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்