இணைய வழி விசாரணைகளுக்காக இ-கோர்ட் திட்டம் அறிமுகம்: மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களை கணினி மயமாக்கி தொழில்நுட்பத்தின் மூலம் நீதி பெறும் நடைமுறைகளை மேம்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த மின் நீதிமன்றங்கள் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது" என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், “மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களை கணினி மயமாக்கி தொழில்நுட்பத்தின் மூலம் நீதிபெறும் நடைமுறைகளை மேம்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த மின் நீதிமன்றங்கள் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்துக்காக உச்ச நீதிமன்றமும், சட்ட அமைச்சகமும் மின் குழு ஒன்றை அமைத்துள்ளன. இதன் முதல் கட்டத் திட்டம் 2011 - 2015 காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. இரண்டாம் கட்டத்திட்டம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் 18,735 மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.

திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைய உள்ள நிலையில், 3-ம் கட்டத் திட்டத்திற்கு, அங்கீகரிக்கப்பட்ட மின் குழு அக்டோபர், 21 2022 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்திற்கான செலவின நிதிக்குழுவின் கூட்டம் 23.02.2023 அன்று நடைபெற்றது.

இத்திட்டத்தின் 3-வது கட்டம், புதிய நவீன அம்சங்களை கொண்டுள்ளதாக அமையும். டிஜிட்டல் முறையிலான காகிதப் பயன்பாடற்ற நீதிமன்றங்கள் என்ற இலக்கை நோக்கியதாக இது அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE