பட்ஜெட் கூட்டத்தொடரில் 2-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, தொழிலதிபர் அதானி விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாறிமாறி அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று முடங்கின. இதையடுத்து இரு அவைகளும் இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில், தொழிலதிபர் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகளும், பிரிட்டனில் இந்திய நாடாளுமன்றம் குறித்து தவறாகப் பேசியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று ஆளுங்கட்சியினரும் மோதிக்கொண்டதால் நேற்றுமுன்தினம், நாள் முழுவதும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்றும் இந்தஅமளி நீடித்தது. அதானி, ராகுல்விவகாரங்களை இரு அவைகளிலும் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் எழுப்பியதால் காலை முதலே கூச்சலும் குழப்பமும் நீடித்தது.

மக்களவை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியதும் தொழிலதிபர் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். அதேநேரம், ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களும், ஆளுங்கட்சி ஆதரவு எம்.பி.க்களும் கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நீடித்தது.

மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை கேட்டுக்கொண்டும், உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவைகூடியபோதும் குழப்பம் நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு 2 மணிக்கு அவைகூடியபோதும் அமளி தொடர்ந்ததால் அவையை இன்று காலைவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். மாநிலங்களவையிலும் இதேகோரிக்கையை எழுப்பி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

ஆஸ்கர் விருதுக்காக பாராட்டு: முன்னதாக ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்காக படக்குழுவினருக்கு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் மத்திய அமைச்சரும், அவை முன்னவருமான பியூஷ் கோயல் பேசும்போது, ராகுல் காந்தி பெயரை குறிப்பிடாமல், வெளிநாட்டில் இந்திய தேசத்தை அவமதித்துவிட்டார் என்றும், அவர்மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்பேசினார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடத் தவறிய மத்திய அரசின் தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரமோத் திவாரி, கே.சி.வேணுகோபால், குமார் கேட்கர், நீரஜ் டாங்கி, அகிலேஷ் பிரசாத் சிங், சையத் நசீர் ஹுசைன், அமீ யாஜ்நிக் ஆகியோர், மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜெகதீப்தன்கரிடம் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். ஆனால் இந்த நோட்டீஸை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து, அதானி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதற்குபதிலடியாக, ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவையின் மையப்பகுதிக்கு வந்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகும், அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணி வரைக்கும், அதன்பிறகும் அதே நிலை நீடித்ததால், இன்று காலை வரையும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோருடன் சோனியா காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோருவது குறித்து நேற்று காலை காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா (உத்தவ் பிரிவு), ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, மதிமுக, தேசிய மாநாட்டுக் கட்சி, கேரளா காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பங்கேற்கவில்லை.

இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை எதிர்கொள்வது தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் பியூஷ் கோயல், நிதின் கட்கரி, அனுராக் தாக்குர், பிரகலாத் ஜோஷி, நரேந்திர சிங் தோமர், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற அவைகளை சுமுகமாக நடத்துவது குறித்து இதில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

மேலும்