உத்தரகண்டில் வெள்ளம்: 6000 பேர் பரிதவிப்பு - 2 பேர் பலி; தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

By செய்திப்பிரிவு

உத்தரகண்ட் மாநிலத்தில் தொடர்ந்து 5-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. மழை வெள்ளத்துக்கு 2 பேர் பலியானார்கள். நதியில் அடித்துச் செல்லப்பட்ட சிலரின் நிலை குறித்து தெரியவில்லை.

மலைப் பகுதியில் யாத்திரை மேற்கொண்டுள்ள 6000-க்கும் மேற்பட்டோர் மோசமான வானிலை காரணமாகவும், சாலை சேதமடைந்துள்ளதாலும் பரிதவித்து வருகின்றனர். அவர்களை மீட்க பேரிடர் மேலாண்மைக் குழுவினர் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கங்கை, பாகீரதி, அலக்நந்தா, மந்தாகினி, காளி சாரதா, கோஷி, கோலா ஆகிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நதிகளின் கரையோரத்தில் வசிப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பல பகுதிகளில் சாலைகள் சேறும் சகதியுமாக இருக்கின்றன. குறிப்பாக பத்ரிநாத் துக்குச் செல்லும் சாலையில் மழை நீர் தேங்கி யிருப்பதால், யாத்ரீகர்கள் பலர் ஜோஷிமடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேபோல, கேதார்நாத்துக்கு செல்லும் சாலையும் மோசமாக இருப்பதால், சோன்பிரயாகையில் பக்தர்கள் தங்கியுள்ளனர். வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, சாலைகள் சீரமைக்கப்பட்ட பின்புதான், பக்தர்கள் யாத்திரையை தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்று பேரிடர் மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரிக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளில் 12 இடங்களில் மரம் பெயர்ந்து விழுந்தும், பாறைகள் விழுந்தும் தடை ஏற்பட்டுள்ளன.

மலைப்பகுதியில் யாத்திரை மேற்கொண் டுள்ள 6000-க்கும் மேற்பட்டோர் மோசமான வானிலையால் எங்கும் செல்ல முடியா மல் பரிதவிக்கின்றனர். அவர்களை மீட்டு அழைத்துவர மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர வெள்ளநீர் சூழ்ந்ததால் ருத்ரபிரயாகை, சமோலி, உத்தரகாசி மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் பிரதான சாலைகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.

இருவர் பலி

ருத்ரபிரயாகை மாவட்டத்தில் உள்ள உகிமாத் பகுதியில் நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். சம்பாவத் மாவட்டத்தில் உள்ள லோஹாகாட் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஆண் ஒருவர் பலியானார்.

கார்வால் அருகே உள்ள ரிக்னிகல், குமான் அருகே உள்ள சுல்தான்பட்டி ஆகிய பகுதிகளில் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இருவர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களின் நிலை என்னவானது என்பது பற்றி தகவல் இல்லை. இதேபோன்று மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆற்று நீரில் மேலும் சிலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு உத்தரகண்டில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு, அதுபோன்று ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைப்பகுதிக்கு செல்வோர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE