புதுடெல்லி: தனது லண்டன் பேச்சு தொடர்பாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ஆளுங்கட்சின் கோரிக்கைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து கூச்சல் எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட கூட்டம் கடந்த மாதம் 10-ம் தேதி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட கூட்டம் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் இன்று காலை தொடங்கியது. மக்களவை நடவடிக்கைகள் தொடங்கியதும் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "ராகுல் காந்தி லண்டனில் நமது நாட்டை அவமானப்படுத்திவிட்டார். அவரது பேச்சிற்கு ஒட்டுமொத்த அவையும் கண்டனம் தெரிவிக்கிறது" என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மத்தியில் திரண்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார்.
அதேபோல், மாநிலங்களவையில் பேசிய அவைத் தலைவர் பியூஸ் கோயல், ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினார். தொடர்ந்து "ஒரு எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் தனது வெளிநாட்டு பயணங்களில் எல்லாம் நாட்டை தவறாக சித்தரிக்க முயல்கிறார்" என்றார். பியூஸ் கோயலின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அவையில் கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமையுண்டு என்று தெரிவித்தும் உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால் மாநிலங்களையும் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் 2 மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கியது. மக்களவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், ராகுல் காந்தி தனது லண்டன் பேச்சிற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சத்தமாக கோஷங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அவையை வழிநடத்திய ராஜேந்திர அகர்வால் மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். அதேபோல மாநிலங்களையிலும் ராகுல் விவகாரம் தொடர்பாக உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பியதால் அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
ஒருமாத இடைவேளைக்கு பின்னர் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டத்தில் மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பதுடன், நிலுவையில் உள்ள நிறைவேற்றப்படாத மசோதக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலங்களவையில் 26 மசோதாக்களும், மக்களவையில் 9 மசோதாக்களும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
முன்னதாக, நாடாளுன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம், அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தி எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பெரும்பாலான அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டத்தில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் மக்களவையில் 84 சதவீதமும், மாநிலங்களவையில் 56 சதவீதமும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம் பிப்.10ம் தேதி நிறைவடைந்தது. இன்று தொடங்கியிருக்கும் இரண்டாவது கட்டம் ஏப்.6ம் தேதி வரை நடக்க இருக்கிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago