பட்ஜெட் கூட்டத்தொடர் | எதிர்க்கட்சிகளின் அமளியால் இருஅவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டம் இன்று(திங்கள்கிழமை) கூடியது. மக்களவையில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது லண்டன் பேச்சுக்காக ராகுல் காந்தி நாடாளுன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி உறுப்பினர்கள், சபாநாயகரின் இருக்கை அருகே வந்து அமளியில் ஈடுபட்டனர். அதேபோல, மாநிலங்களவையிலும் ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு குறித்து பியூஸ் கோயல் தெரிவித்த கருத்தால் அமளி ஏற்பட்டது. இதனால் இரண்டு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

ஒருமாத இடைவேளைக்கு பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பதுடன், நிலுவையில் உள்ள நிறைவேற்றப்படாத மசோதக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலங்களவையில் 26 மசோதாக்களும், மக்களவையில் 9 மசோதாக்களும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

முன்னதாக, நாடாளுன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம், அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தி எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பெரும்பாலான அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டத்தில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் மக்களவையில் 84 சதவீதமும், மாநிலங்களவையில் 56 சதவீதமும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம் பிப்.10ம் தேதி நிறைவடைந்தது. இன்று தொடங்கியிருக்கும் இரண்டாவது கட்டம் ஏப்.6ம் தேதி வரை நடக்க இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE