எனக்கு கல்லறையைத் தோண்டுகிறது காங்கிரஸ்; நானோ ஏழைகளை மேம்படுத்தி வருகிறேன் - பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

மாண்டியா: "தாய்மார்கள், சகோதரிகள் உள்ளிட்ட நாட்டு மக்களின் ஆசிர்வாதம் எனக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பதை அறியாமல் காங்கிரஸ் கட்சி எனக்கு குழி பறிக்கும் கனவை காண்கிறது" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மாண்டியாவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூரு - மைசூரு இடையேயான‌ 118 கி.மீ. தூர 10 வழி நெடுஞ்சாலை, ஹுப்ளி - தார்வாட் இடையிலான சாலையை திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனால் இப்பகுதியின் சமூக பொருளாதார வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில், சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாயிலான மக்கள் நல திட்ட பணிகளைத் தொடங்கிவைத்தார் பிரதமர்.

இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, "ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையைத் திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் பணிகளில் நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு கல்லறைத் தோண்டும் பணிகளில் காங்கிரஸ் கட்சி மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தாய்மார்கள், சகோதரிகள் உள்ளிட்ட நாட்டு மக்களின் ஆசிர்வாதம் எனக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பதை அறியாமல், காங்கிரஸ் கட்சி அத்தகைய கனவு கண்டு வருகிறது.

2014-ம் ஆண்டுக்கு முன்புவரை, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி, ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக ஒரு கல்லைக்கூட நட்டுவைக்கவில்லை. அவர்களின் பணத்தை காங்கிரஸ் கட்சி கொள்ளையடித்து வந்தது. காங்கிரஸ் ஆட்சியில் எளிய மக்கள் தங்களுக்கான அரசின் பலன்களைப் பெறுவதற்காக அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டனர். ஆனால், பாஜக ஆட்சியில் அரசின் நலத்திடங்களும் அதன் பயன்களும் அவர்களது வீட்டு வாசலை சென்றடைகிறது.

நாடு முழுவதும், நவீன உள்கட்டமைப்புக்காக ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவும், கா்நாடகாவும் மாறி வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டில் முதலீடுகளில் இந்தியா சாதனை படைத்தது. இதில் அதிகமாக பயனடைந்தது கர்நாடக மாநிலம்தான். கரோனா பெருந்தொற்றின் தாக்கம் இருந்தபோதிலும், ரூ.4 லட்சம் கோடி கர்நாடகத்தில் முதலீடு செய்யப்பட்டது.

மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான வீடுகள் கர்நாடக மாநிலத்தில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் பேசினார்.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 2023-க்கு முன் தேர்தல் நடைபெறவுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கின்ற கர்நாடக மாநிலத்தின் மாண்டியா பகுதியில் பிரதமர் காங்கிரஸ் கட்சியை குறித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE