டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் விவகாரம் - தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவிடம் தீவிர விசாரணை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி மாநில அரசின் மதுபானக் கொள்கை ஊழல் விவகாரம் தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவிடம் டெல்லியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று 9 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

டெல்லி மாநில மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மது விற்பனையுடன் சம்பந்தப்பட்ட குழுவிடம் இருந்து ஆம் ஆத்மி தலைவர்கள் சார்பில், அக்கட்சியின் விஜய் நாயர் சுமார் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகவும், அந்த குழுவில் சரத்ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, மகுன்ட ஸ்ரீநிவாசுலு ரெட்டி உள்ளிட்டோர் இருந்ததாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிபிஐ ஒரு வழக்கும், இந்த பேரத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக கவிதாவிடம் சிபிஐ கடந்த டிசம்பரில் விசாரணை நடத்தியது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 9-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கவிதாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. கவிதா தரப்பில் 2 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டதால், மார்ச் 11-ம் தேதி (நேற்று) ஆஜராக அமலாக்கத் துறை அனுமதி அளித்தது.

விசாரணைக்காக டெல்லி வந்த கவிதா, தனது தந்தையும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் இல்லத்தில் தங்கினார். நேற்று காலை அங்கிருந்து அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு காரில் சென்றார். வீட்டின் முன்பும், அமலாக்கத் துறை அலுவலகம் அருகிலும் பாரத் ராஷ்ட்ரிய சமிதியின் (பிஆர்எஸ்) கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் மத்திய அரசு மற்றும் அமலாக்கத் துறைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதற்கிடையே, அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரான கவிதாவிடம் டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். அவர் பயன்படுத்திய செல்போன், சிம் கார்டுகள் குறித்தும் கேள்வி எழுப்பினர். விசாரணை நடத்தியதை வீடியோவிலும் பதிவு செய்தனர்.

காலையில் தொடங்கிய விசாரணை இரவு 8 மணி வரை நீடித்தது. மொத்தம் 9 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. மார்ச் 16-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

‘பழிவாங்கும் நடவடிக்கை’: முன்னதாக, இந்த விசாரணை குறித்து செய்தியாளர்களிடம் கவிதா பேசும்போது, ‘‘நாட்டின் 9 மாநிலங்களில் பின்வாசல் வழியாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. தெலங்கானாவில் அவ்வாறு நுழைய முடியாததால், பழிவாங்கும் நோக்கில் என்னிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறையை பயன்படுத்துகிறது. நான் தவறு செய்யவில்லை. எனவே, விசாரணையை கண்டு அஞ்சவில்லை’’ என்றார்.

இந்த வழக்கில், டெல்லி மாநில துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு திஹார்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, கவிதா கைது செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டதால், தெலங்கானாவில் இருந்து 20 உளவுத் துறை போலீஸார் குழுவினர் டெல்லியில் முகாமிட்டு, தகவல்களை உடனுக்குடன் தெலங்கானாவுக்கு தெரியப்படுத்தி வருகின்றனர். தெலங்கானா அமைச்சர்கள் 6 பேரும் டெல்லி விரைந்துள்ளனர். கைது நடவடிக்கை நடந்தால், டெல்லியில் மத்தியஅரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தெலங்கானாவில் போராட்டம்: இந்நிலையில், நேற்று காலை முதல் ஹைதராபாத் உட்பட தெலங்கானாவில் பாஜகவுக்கும், தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய்க்கும் எதிராக பிஆர்எஸ் கட்சியினர் உருவ பொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

பண்டி சஞ்சய் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் மனு கொடுக்க ஹைதராபாத் மேயர் விஜயலட்சுமி தலைமையில் பிஆர்எஸ் கட்சியினர் ராஜ்பவன் சென்றனர். அவர்களை சந்திக்க ஆளுநர் அனுமதி தராததால், ராஜ்பவன் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில்மத்திய அரசின் உருவ பொம்மையைபிஆர்எஸ் கட்சியினர் எரித்தனர். முதல்வர் மகளிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியுள்ளதால் தெலங்கானாவில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்